தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்ற கூட்டணிகளில் உள்ள கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்றுவரை இழுத்துக் கொண்டு இருக்கிறது.
நேற்று டெல்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கூடிய ஆய்வுக் கூட்டம் இரண்டு முறை நடந்த போதும் அதில் பல சலசலப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.
கிருஷ்ணகிரி தொகுதிக்கு மோதல்!
குறிப்பாக தற்போது கிருஷ்ணகிரி எம்பி ஆக இருக்கும் டாக்டர் செல்லகுமாருக்கு பதிலாக ஓசூர் முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் பெயரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சிபாரிசு செய்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அதிருப்தி அடைந்த செல்லகுமார்… சோனியா காந்தி ராகுல் வரை தலையிட வைத்து தனது சீட்டை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.
ஓசூர் முன்னாள் எம்எல்ஏவான கோபிநாத் அருகே உள்ள பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கேவின் மகனை சந்தித்து தனது சீட்டுக்கு அடித்தளம் இட்டு உள்ளார் என்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸார் தெரிவிக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி எம்பி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் வேட்பாளராக நிறுத்தப்படக்கூடாது என திமுக வலியுறுத்தியதாக ஏற்கனவே மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் விருப்பம் நிறைவேறுமா?
அதேபோல ராகுல் காந்தியின் நெருக்கமான நண்பரான அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்திக்கு மயிலாடுதுறை தொகுதியை ராகுலே விரும்பி இருக்கிறார்.
ஆனால் ஆரணி தொகுதியில் வாய்ப்பு இழந்த அந்த தொகுதியின் சிட்டிங் எம்பி விஷ்ணு பிரசாத், வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள மயிலாடுதுறை தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று மிக கடுமையாக முட்டி மோதி வருகிறார்.
இந்த இரு தொகுதிகள் உள்ளிட்ட மேலும் சில தொகுதிகளுக்கான முட்டல் மோதல்கள் நேற்று இரவு வரை நீடித்துள்ளன.
இன்று அனேகமாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கட்சிக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
IPL 2024: ஒரே இந்திய வீரர்… ‘கிங்’ கோலி படைத்த புதிய சாதனை!
”இசையில் குறுகிய அரசியலைக் கலக்காதீர்கள்” : டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஸ்டாலின் ஆதரவு!