அமலாக்க துறை, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் முக்கிய விசாரணை அமைப்பு. ‘தற்போது பாஜக ஆட்சியில் பிரதமர் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது, எதிர்க்கட்சிகளை குறிப்பாக இந்தியா கூட்டணியில் இருப்பவர்களை மட்டுமே குறிவைத்து சோதனை நடத்துகிறது’ என எதிர்கட்சிகளால் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இத்துறையின் பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே , கடந்த 2018ஆம் ஆண்டு அமலாக்கத் துறை இயக்குநராக எஸ். கே. மிஸ்ரா 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் இவருடைய பணி காலம் முடிந்த பின்னும் 2021, 2022, 2023 என மூன்று முறை எஸ்.கே. மிஸ்ராவை பணி நீட்டிப்பு செய்தது மத்திய அரசு.
இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மிஸ்ராவின் பணி நீட்டிப்பு செல்லாது என்று தெரிவித்தது. ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே மிஸ்ரா பணியில் நீடிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்துக்குள் புதிய இயக்குநரை தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அரசு புதிய இயக்குநரை நியமிக்கமில்லை. மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு கடந்த ஜூலை 27ஆம் தேதி நீதிபதிகள் பி. ஆர். கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் அமர்வில் விசாராணைக்கு வந்தது.

அப்போது, “மிஸ்ராவை தவிர அமலாக்கத் துறையில் திறமையானவர்கள் இல்லையா?” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “செப்டம்பர் மாதம் இந்தியாவில் சட்டவிரோத பணப்பறிமாற்றத்தை தடுக்கும் சர்வதேச கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதனால் தான் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு கேட்கிறோம்” என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, “சட்டவிரோத பணப்பறிமாற்றத்தை தடுக்கும் சர்வதேச கூட்டத்தை பணி நீட்டிப்புக்கு ஒரு காரணமாக சொல்வதா? இந்த கூட்டத்தின் நடைமுறை 2024 வரை தொடரும்.
ஆனால் இவர்கள் அக்டோபர் 2023 வரை மட்டும் பணி நீட்டிப்பு கேட்கிறார்கள். 140 கோடி மக்கள் இவரை நம்பித்தான் இருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதை விசாரித்த நீதிபதிகள், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்து உத்தரவிட்டனர்.
பொது நலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், “செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு பதவிநீட்டிப்பு கோரி யாரேனும் வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு கூட ஏற்க மாட்டோம்” எனவும் காட்டமாக தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவை தொடர்ந்து அமலாக்கத் துறைக்கு பொறுப்பு இயக்குநரை மத்திய அரசு நியமித்துள்ளது.
பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இவர்?
பீகாரைச் சேர்ந்த ராகுல் நவீன் 1968ஆம் ஆண்டு பிறந்தவர். பிகார் மாநிலத்தின் வடக்கில் நேபாளம் எல்லையை ஒட்டியிருக்கும் பெத்தியா பகுதியில் கே.ஆர்.மேல் நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.
தொடந்து 1990ல் ஐஐடி கான்பூரில் பயின்ற ராகுல் நவீன் 1993 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி ஆவார்.
மத்திய நிதித் துறையில் பணியில் சேர்ந்த இவர், இந்திய வருவாய், வருமான வரி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார்.
ஏப்ரல் 2011 – அக்டோபர் 2015 வரை, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் FT&TR பிரிவில் இயக்குநராகப் பணிபுரிந்தார்,
2015-2017 ஆம் ஆண்டு வரை இதே பிரிவில் பதவி உயர்வு பெற்று ஆணையராக பணியாற்றினார்.
2017-2019 வரை மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விஜிலென்ஸ் பிரிவில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக இருந்தார்.
2019 முதல் தற்போது வரை அமலாக்கத் துறை தலைமையகத்தில் விஜிலென்ஸ் சிறப்பு இயக்குநராக பணியில் உள்ளார். கூடுதலாக அவருக்கு என்று ED இயக்குநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இவர் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு, தகவல் பரிமாற்றத்திற்கான உலகளாவிய மன்றம் மற்றும் ஜி20 அமைப்புகளின் கூட்டத்தில் தவறாது பங்கேற்பவர். நடந்து முடிந்த ஜி20 மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.
“தகவல் பரிமாற்றம் மற்றும் வரி வெளிப்படைத்தன்மை” உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
தற்போது அமலாக்கத் துறை பொறுப்பு இயக்குநராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், அவரது முன் பல முக்கிய வழக்குகள் உள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலத்தின் போது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி., ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், என்சிபி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஆம் ஆத்மி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின். தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதில் மணீஷ் சிசோடியா, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர்.
இந்தசூழலில் அமலாக்கத் துறையின் புதிய பொறுப்பு இயக்குநரான ராகுல் நவீனின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இதுவரை அவர் வகித்த அனைத்து பதவிகளையும் திறமையாக கையாண்டவர் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரியா
