ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் இருந்து இன்று (ஜனவரி 14) தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் (Bharat Jodo Yatra) என்ற பெயரில் மேற்கொண்டார்.
தெற்கே கன்னியாகுமரியில் இருந்து வடக்கே காஷ்மீர் வரை நோக்கி 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 136 நாட்களாக நடைபயணம் இருந்தது. இது மக்கள் மத்தியில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி ராகுல்காந்தி ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்'(Bharat Jodo Nyay Yatra) என்ற பெயரில் 2-வது கட்டமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து ராகுல்காந்தியின் இந்த நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தொடங்கி வைத்தார்.
இந்த பயணத்தின் மொத்த தூரம் என 6713 கிலோ மீட்டர் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் நடைபயணத்தில் பெரும்பாலும் ராகுல்காந்தி பேருந்தில் இருந்தபடியே மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
மொத்தம் 67 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயணமானது, மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று இறுதியில் மஹாராஷ்டிராவில் வரும் மார்ச் 21-ந் தேதி நிறைவடைய உள்ளது.
கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜனதா ஆட்சியின் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும், பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்ப மத்திய அரசு வாய்ப்பு அளிக்காததாலும், அரசமைப்பு சட்டம் பாதுகாத்து வரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டவும், இந்த யாத்திரை நடைபெறுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி நிலம் தானம் : ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது!
யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை: அண்ணாமலைக்கு தமிழக அரசு பதிலடி!
லைஃப்டைம் செட்டில்மெண்ட்: அர்ச்சனாவுக்கு கிடைக்கப்போகும் மொத்த பணம் எவ்வளவு தெரியுமா?