2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் சசிகாந்த் : ராகுல் காந்தி ஆதரவு!

Published On:

| By christopher

rahul gandhi support sasikanth 2nd day protest

தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) நிதியை வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் 2வது நாளாக இன்று (ஆகஸ்ட் 30) தொடர்ந்து வருகிறார். அவருக்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற பெயரிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

ஏற்கெனவே நடப்பாண்டுக்கான (2024-25) நிதியானது பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் இன்னும் ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய SSA நிதியை அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசை கண்டித்தும், நிதியை உடனடியாக விடுவிக்கக்கோரியும் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

ADVERTISEMENT

இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் அவருக்கு இன்று ரத்தம் அழுத்தம் குறைந்தது. இதனையடுத்து அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, தொலைபேசி மூலம் இன்று தொடர்பு கொண்டு சசிகாந்த் செந்திலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அப்போது உடல்நலனைக் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்திய ராகுல், போராட்டத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதவிர காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திர சேகர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் நேரில் சென்று சசிகாந்த் செந்திலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சசிகாந்தின் போராட்டத்தைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அப்பகுதி நிர்வாகிகளும் SSA நிதிக் கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share