உங்களால் வாழ்நாளில் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று பாஜகவை பார்த்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் 2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசிய ராகுல் காந்தி, 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆழமான சிக்கல்களைத் தீர்க்கும் அறிவிப்புகள் எதுவும் இல்லை. இது தலைமைத்துவத்தின் பார்வையாக இல்லை, அதற்கு மாறாக எதையாவது காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் அதிகாரிகள் குழுவால் எழுதப்பட்டது போல் தோன்றுகிறது.. நாடு எதிர்கொள்ளும் எந்த பிரச்சினை குறித்தும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை.
வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் இந்தியாவில் நிலவுகிறது. பணக்காரர்களுக்கு ஒன்று ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியாவாக உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு இடையேயான இடைவெளியும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் 40 சதவிகித செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் சென்றுள்ளது. 84 சதவிகித இந்தியர்களின் வருமானம் குறைந்து அவர்கள் வறுமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.
மேட் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் இனி அது சாத்தியமில்லை. சிறு குறு தொழில்களை ஆதரிக்கவில்லை எனில் மேட் இன் இந்தியா திட்டம் சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள் என எதுவாக இருந்தாலும் ஒரு சிலருக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தியாவை ஒரு அரசு ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்தால் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் சகோதரர்களைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம் வரலாறு கலாச்சாரம் உள்ளது அதனை மதிக்க வேண்டும்.
தமிழகம் ஒவ்வொரு முறையும் உங்களிடம் திரும்ப வந்து நீட் தேர்வு வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறது. ஆனால் நீங்களும் முடியாது வெளியே போங்கள் என்று கூறுகிறீர்கள். உங்களுடைய கட்டமைப்பில் அவர்களின் குரலுக்கு மதிப்பு இல்லை.
உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கப் பேசினார்.
**-பிரியா**
