வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 29) காலை புறப்பட்டார்.
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையே இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோதல் ஏற்பட்டு, அந்த மாநிலமே கடந்த மே 3ஆம் தேதி முதல் இரு மாதங்களாக வன்முறை களமாக மாறியிருக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கள ஆய்வு செய்தார். அதன்பிறகே அங்கு பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டது. ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செல்லவுள்ளார் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்தது.
“ஜூன் 29-30 தேதிகளில் ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ராகுல் காந்தி மணிப்பூருக்கு புறப்பட்டார்.
முன்னதாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக அமித் ஷா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டுமே இந்த கூட்டம் நடைபெற்றதாகவும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதுபோன்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அனைத்துக் கட்சி குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில் இன்று காலை ராகுல் மணிப்பூருக்கு புறப்பட்டுள்ளார்.
பிரியா
