அழைக்கும் ராகுல்… யோசிக்கும் ஸ்டாலின்… எங்கே, ஏன்?

Published On:

| By Selvam

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த தேர்தலைப் போல் ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் சென்று பாயின்ட் பாயின்ட்டாக திறந்தவேனில் சென்று பிரச்சாரம் செய்யாமல், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பொதுக்கூட்டம் என தனது பிரச்சார ஸ்டைலை மாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

அதிக வெப்பம் மற்றும் அவரது உடல் நலம் கருதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி இத்தகைய பொதுக்கூட்ட ஸ்டைல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் இறங்க… ஒவ்வொரு தொகுதியாக ஒவ்வொரு பாயின்ட்டாக சென்று அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதற்கிடையே வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கோவைக்கு வருகிறார். அங்கே ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இணைந்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

இந்த சூழலில், ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக தேர்தல் முடிவடையும் நிலையில்… ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தேர்தல் முடிந்த பிறகு… கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்திக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வர வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி முதலமைச்சர் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஓரிரு நாட்களாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

“திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விஷயங்களை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், தனக்காக வயநாட்டில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார்.

கேரளாவில் எதிர் முகாம்களில் இருக்கும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ளன. அங்கே ராகுல் காந்திக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருவரும் திமுக கூட்டணியில் இருக்கும்போது… கேரளாவில் இவர்களில் ஒருவரை மட்டும் ஆதரித்து பிரச்சாரம் செய்வது சரியாக இருக்குமா என்ற யோசனையில் இருக்கிறார் ஸ்டாலின். அதே நேரம் ராகுல் காந்தியுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்காக ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புள்ளது” என்கிறார்கள் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share