கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மங்களூரில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது,
“கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கிரிலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய், மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ அரிசி மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் தருவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதனுடன் சேர்த்து பெண்களுக்கு முக்கிய திட்டமான அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தை நான் அறிவிக்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த முதல்நாளே இந்த 5 திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
காங்கிரஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுகிறோம்.
பிரதமர் மோடி ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், அதானிக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
செல்வம்
