ராகுலின் வேண்டுகோள்!

Published On:

| By Balaji

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் கவலையளிக்கிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வந்தாலும், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. கேரளாவில் தினசரி பாதிப்பு 22ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறது. தினசரி பாதிப்பு விகிதம் 11 சதவிகிதமாக உள்ளது. அதனால், கேரளாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கேரள அரசுக்கு தொற்று பாதிப்பு நடவடிக்கையில் உதவும் வகையில், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழு கேரளாவிற்கு வந்துள்ளது. அக்குழு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி ட்விட்டரில், “கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு மாநிலத்தில் உள்ள என்னுடைய சகோதர, சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து உங்களை கவனித்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share