பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம்: கர்நாடகாவில் ராகுல் வாக்குறுதி!

Published On:

| By Aara

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நேற்று பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிலையில்,  கர்நாடகத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இதே வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கும் நிலையில் அதற்காக பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய முக்கிய கட்சிகளோடு ஆம் ஆத்மி கட்சியும் தீவிரமாக களமிறங்கியுள்ளது

தமிழ்நாட்டை விட பத்து சட்டமன்ற தொகுதிகள் குறைவாக அதாவது 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதை ஒட்டி பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகாவுக்கு விசிட் அடித்து வருகிறார். கடந்த வாரம் கூட பெங்களூரு- மைசூர் எக்ஸ்பிரஸ் சாலையை அவர் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று மார்ச் 20 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி 80 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

தற்போது பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக முயற்சிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாநிலம் கர்நாடகா என்பதால், இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே அதிக அக்கறை காட்டுகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (மார்ச் 20) கர்நாடகா மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

Rahul Gandhi announce Rs 3000 for graduates

அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது.  ‘வேலையின்மையை சமாளிக்கும் வகையில்  மாதாமாதம்  பட்டதாரிகளுக்கு ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார் ராகுல் காந்தி.

“அனைத்துக் குடும்பங்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்,  குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  ரூ. 2,000 வழங்கப்படும்” என்று ஏற்கனவே காங்கிரஸ் வாக்குறுதிகளை அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

பாரத் ஜோடோ யாத்ராவிற்குப் பிறகு முதல் முறையாக கர்நாடகாவுக்கு வந்த ராகுல் இந்த கூட்டத்தில் பேசும்போது, “நான் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில் வேலையற்ற இளைஞர்கள் என்னிடம் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் அறிவித்துள்ளோம். உங்கள் வலி எங்களுக்குப் புரிவதே இதற்குக் காரணம்.

Rahul Gandhi announce Rs 3000 for graduates

இதுமட்டுமல்ல, காங்கிரஸ் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும். அரசுப் பணிகளில் காலியாக உள்ள 2.5 லட்சம் பணியிடங்களும் நிரப்பப்படும்” என்று கூறிய ராகுல் காந்தி,

“கர்நாடக பாஜக ஆட்சி 40% கமிஷன் ஆட்சி. மாநில மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநில அரசாங்கம் என்றால் அது கர்நாடகாதான்.  இதை நான் சொல்லவில்லை. பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதை என்னிடம் சொன்னார்கள்” என்றார் ராகுல் காந்தி.

ஆரா

நயன்தாராவால் இயக்குநருக்கு சிக்கல்!

பலா – கறிவேப்பிலை- முருங்கை: அறிவிப்புகள் என்னென்ன? 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share