‘ஹலோ கேப்டன்!’: மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட்

Published On:

| By Selvam

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், 2024 டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடைந்தது. அந்த தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதை தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார்.

இதை தொடர்ந்து, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

இப்படியான சூழலில், ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடரில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. கவுதம் கம்பீர் விட்டுச்சென்ற ‘மென்டர்’ பொறுப்புக்காக ராகுல் டிராவிட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அணுகியதாக தகவல் வெளியானது.

அதேபோல, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் உள்ளிட்ட ஐ.பி.எல் அணிகளும் ராகுல் டிராவிட்டை அணுகியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அவர் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணியில் இணைந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் லஷ் மெக்கிரம் அந்த அணியின் ஜெர்ஸியை ராகுல் டிராவிட்டிற்கு வழங்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, ஆர்.ஆர் அணி அந்த செய்தியை உறுதி செய்துள்ளது.

இதை தொடர்ந்து, ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை தொலைபேசி மூலம் அழைத்து, ‘ஹலோ கேப்டன்’, எனக் கூறும் ஒரு காணொளியையும் அந்த அணி வெளியிட்டுள்ளது.

அதேபோல, ராஜஸ்தான் அணியின் நிர்வாக சந்திப்பில் டிராவிட் பங்கேற்று ஆலோசிக்கும் வீடியோ ஒன்றையும், அந்த அணி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.

இது குறித்து பேசிய அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கார, “இந்த அணியின் எதிர்காலம் குறித்து, நான் அவரிடம் (டிராவிட்) ஏற்கனவே சிலமுறை பேசியுள்ளேன். எங்கள் பார்வையை மெய்யாக்க காத்திருக்கிறோம்”, எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, ராகுல் டிராவிட் 2011 முதல் 2013 வரை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல் தொடரில், 89 போட்டிகளில் 2174 ரன்கள் சேர்த்துள்ள ராகுல் டிராவிட், ராஜஸ்தான் அணிக்காக 46 போட்டிகளில் விளையாடி 1276 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘35’ – ‘சின்ன கத காது’: விமர்சனம்!

மகா விஷ்ணு மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு: எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share