”தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டுக்கு எதிரான இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி வருகின்றார். இதனை தேர்தல் ஆணையம் மறுத்து ராகுல் மீது குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் வாக்கு திருட்டு மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் என்ற பெயரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக மனு கொடுக்க டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்டனர். 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பிக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
ஆனால் சிறிது தூரத்திலேயே இரும்பு தடுப்புகளைக் கொண்டு எம்.பி.க்கள் அனைவரையும் டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்த முயன்றனர். சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்.பியுமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சிலர் தடுப்புகளை தாண்டி குதித்தனர்.
ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திருச்சி சிவா, கனிமொழி உள்ள எம்.பிக்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸ் தடையை மீறியதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி, சஞ்சய் ராவத் தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்தபடி ராகுல்காந்தி அளித்த பேட்டியில், “மத்திய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தால் வாக்கு திருட்டு குறித்து பேச முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் உண்மை நாட்டின் முன் உள்ளது. இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்குக்கானது. எங்களுக்கு சுத்தமான, தூய்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும். இந்த உரிமையை நாங்கள் என்ன விலை கொடுத்தாவது பாதுகாப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
