வீ.எம்.எஸ். சுபகுணராஜன்
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே காங்கிரஸின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது என்கின்றன மோடியின் துதிபாடும் இந்திங்லிஷ் செய்தி ஊடகங்கள். ஏன் மிக மோசமான நிலையில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ்? மிக விரைவாக வலுவிழந்து வரும் அந்தக் கட்சி இந்தியாவில், பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று என்ற தகுதியை முற்றிலுமாக இழந்து விடுமா? மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் முடிவுரை எழுதப்பட தொடங்கிவிட்டதா?
இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், பதில்கள் அவ்வளவு எளிதானவை இல்லை. அதைவிட பாஜக போன்ற பெரும்பான்மை மதவாதக் கட்சி, இந்து இந்திய முதலாளிகளின் துணையோடு, அவர்களின் நலனைப் பேண மட்டுமே முனைந்து நிற்கும்போது , காங்கிரஸ் போன்ற பிரதான எதிர்க்கட்சி அடையாளமற்று பலவீனமாகிக்கொண்டே போவது உவப்பானதில்லைதான். ஆனால், காங்கிரஸ்தான் பாஜகவுக்கான ஒரே மாற்று என்பதையும் ஏற்பதற்கில்லை.
மாநில உரிமைகள் மற்றும் நலன்சார் மாநிலக் கட்சிகள் வரவேற்பிற்குரியவைதான். இன, மொழி, பன்மைத்துவ கலாச்சார விழுமியங்களை முன்னிறுத்தும் மாநிலக் கட்சிகளே, இந்திய அரசியலில் அசலான கூட்டாட்சிக் குடியரசாக மலர்வதற்குச் சிறந்த வழி. ஆனால், நாம் ஒரு முரட்டு பெரும்பான்மை பலத்துடன், ஒன்றிய அரசை, தனது மிக மோசமான, சமூகத்தைப் பிளவுபடுத்தும் பாசிச இந்துத்துவ பெரும்பான்மைவாத கொள்கைகளால் செயல்படுத்தும் ஒரு ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம் எனும்போது ‘உன்னதம்’ பற்றிய கனவு உதவாது.
பாஜகவுக்கு முன்னோடி காங்கிரஸே!
அப்படியானால் இந்திய மக்களாட்சியை காக்கவாவது காங்கிரஸ் போன்ற கட்சி வேண்டுமென்பதுதான் வாதமா? இதற்கான பதிலை இரண்டு வகையில் சொல்லிப் பார்க்கலாம். முதலில் இல்லை என்பதற்கான காரணங்களைப் பார்க்கலாம். இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுத்தும், ஆட்சி வடிவினை வடிவமைத்துக்கொடுத்தது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே.

குறிப்பாக, தீவிரவாதம், கருத்துரிமை, கார்ப்பரேட் நலன் பொருளாதாரக் கொள்கை போன்றவற்றின் அடிப்படைகளை உருவாக்கித் தந்தவர்கள் அவர்களே. 90களில் உலகமயமாக்கலின் கதவுகளை அகலத் திறந்து, அதன் பலன்களையும், விளைவுகளையும் விதைத்தவர்கள் அவர்களே. பாரதிய ஜனதா கட்சி போன்ற இந்து வியாபாரிகளின் நலன் பேணும் கட்சியை ஆட்சிப் பொறுப்பேற்குமளவிற்கான கட்சியாக மாற்றியதில் காங்கிரஸ் பங்கு பெரிது.
90களின் நடுவில் உருவான பல்கட்சி கூட்டணியாட்சிகளைக் கவிழ்த்து முதல் பாஜக ஆட்சியை ஏற்படுத்தியதும் காங்கிரஸின் கைங்கர்யமே. இன்னும் சொல்வதானால், 2004-2014 வரையான காங்கிரஸ் தலைமையிலான அரசை ஒரு ‘எக்சிக்யூட்டிங் பிரதமர்‘ (மன்மோகன் சிங்) தலைமையின் கீழ் விட்டு, இன்றைய குஜராத் முதலீட்டியம் மற்றும் ஆர்எஸ்எஸ் கூட்டணி அரசு உருவாக காரணமானவர்களும் அவர்களே.
காங்கிரஸ் வீழ்ச்சி குறித்து ஏன் அக்கறை?
பிறகேன் காங்கிரஸ் வீழ்ச்சி குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டும். அதற்கான காரணங்கள் பல உண்டெனினும் அவற்றில் பிரதானமானது, அந்தக் கட்சியின் குறைந்தபட்ச மதச்சார்பின்மை கொள்கை ஒன்றே. அதன் பல சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான சட்ட உருவாக்கங்களையும் கடந்து, அதற்கான அடிப்படையாகக் கருதப்பட்டது அதன் ஓரளவிலான மதச்சார்பின்மை நிலைப்பாடே. கவனம் ஓரளவிலானது மட்டுமே. ஆனால், அதுவே இன்றைய இந்திய அரசியல் களத்தில் அபூர்வமாகிவிட்டது என்பதே இந்தளவாவது உள்ள கட்சி தேவலாம் என்றாகிப் போனது.
மூத்தவர்கள் Vs இளைய தலைமுறை
சரி, காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை என்ன? ராகுலை தலைமை வரை நகர்த்தியதை கட்சியினர் பெரும்பான்மையினர் ஏற்கவே செய்தனர். அதிலொன்றும் குழப்பமில்லை. கட்சிக்குள் மூத்த தலைவர்கள் Vs இளைய தலைமுறை என்ற மோதல்
இருப்பது தெரிகிறது. இதுவும்கூட அரசியல் கட்சிகளில் இயல்புதான். 2019 தேர்தலுக்கு முன்னரான சீட் ஒதுக்கீட்டில், மூத்தவர்கள் கொடுத்த அழுத்தத்தை ராகுல் ரசிக்கவில்லை எனத் தகவல் கசிந்தது. ஆனால், அதற்கு முன்னரான ஐந்து மாநிலத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடனே இந்த அழுத்தம் எழத்தானே செய்தது. ராஜஸ்தானில் அசோக் கேலாட், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் முதல்வர் ஆனதே இந்த அழுத்தம் வழியாகத்தான் என்பது ஊரறிந்த செய்திதானே.
ராகுலின் திட்டம் மாநில முதல்வர் பதவிகளை மூத்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு, ஒன்றிய அளவிலான அணியைத் தனது தேர்வான இளைஞர்களைக்கொண்டு அமைப்பது என்பதா? அதிலும் மூத்தவர்கள் தலையீட்டை அவர் விரும்பவில்லை எனப் புரிந்துகொள்வதா?
மென் இந்துத்துவா
ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் ராகுல் பதவியைத் துறந்து விட்டு ஒதுங்கியதும், காஷ்மீர் தொடர்பான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370ஐ பாஜக அரசு அதிரடியாக நீக்கியபோது நாடாளுமன்றத்திலேயே அமைதி காத்ததையும் எப்படிப் புரிந்துகொள்வது என விளங்கவில்லை.
அதைவிட இளைஞர்களான சிந்தியா, மிலிந் தியோரா போன்றவர்கள் காஷ்மீர் நடவடிக்கையை ஆதரித்ததுதான் இன்னும் சிக்கல். காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் மூத்தவர்கள் Vs இளையவர்கள் மோதல் வெறும் அதிகாரம் தொடர்பிலானது மட்டுமில்லை,கொள்கை சார்ந்ததும்கூட என்று விளங்கிக்கொள்ள வேண்டுமோ. அதாவது மூத்தவர்கள் வழக்கமான (வழுக்கலான) மதச்சார்பின்மை சார்பானவர்களாகவும், இளையவர்கள் மென் இந்துத்துவ நிலைப்பாட்டு ஆதரவாளர்கள் என்றும் கொள்வதா? விபரீதம் இங்கேதான். அதாவது கட்சிக்குள்ளான முரண் பாஜகவை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டியதான மதவாத எதிர்ப்பு நிலையின் தன்மை குறித்த தளத்தில் நடக்கிறதா?

எந்தவித தயக்கமுமற்ற ஒரு இந்துத்துவக் கட்சியை, மென் இந்தியத்துவம் வழியாக எதிர்கொண்டதன் ‘பலனை’ ( மோசமான தேர்தல் தோல்வி ) கண்ட பின்னும் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களா அல்லது தங்களது மென் இந்துத்துவ நிலைப்பாட்டை இன்னும் சற்றுத் தூக்கலாக்குவதுதான் சரியெனக் கருதுகிறார்களா? அதனையும் நாளைய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கருதப்படும் இளைஞர்கள் செய்வதை என்னவாக பார்ப்பது?
ராகுல் பதவி விலகக் காரணம்!
இவை எல்லாவற்றையும்விட, நம்முன் நிற்கும் மாபெரும் கேள்வி… ராகுலின் பதவி விலகலுக்கான அசலான காரணம் என்ன? தேர்தல் களத்தின் தாக்குதல்களைத் தனியாக எதிர்கொள்ள வேண்டியவனானேன் என அவர் அறிவித்ததன் பொருள் என்ன? தனித்து விடப்படுவது என்பதன் அர்த்தம் அனைத்துத் தரப்பினராலும் என்றுதானே பொருள்படும். அதாவது ராகுல் மூத்தவர்களால் மட்டுமில்லை, இளையவர்களாலும் கைவிடப்பட்டார் எனத்தானே அர்த்தம் .
ராகுலின் தனிமை என்ன? இந்திய அரசியலின் வாரிசுகள் தொடர்பான பேச்சின் மையமே நேரு / இந்திரா வாரிசுகளை மையமிட்டே நடக்கும். ஆனால், அந்த வாரிசு அரசியலின் உறுதித் தன்மை ராஜீவ் காந்தியோடு குலைந்துபோனதாகவே தோன்றுகிறது.
ராஜீவ் மரணத்துக்குப் பின்னர் பத்து ஆண்டுகள் கட்சிக் கட்டுப்பாடு முழுமையாக சோனியாவிடம் வந்து சேரவில்லை. அது இறுதியாக வந்தபோதும் சரத் பவார் உள்ளிட்ட பெரும்புள்ளிகள் அதை ஏற்கவில்லை. அதைவிடச் சிக்கல் 2004ஆம் ஆண்டின் பிரதமர் தேர்வின்போது நடந்தது. காங்கிரஸை அதன் அதலபாதாள வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்த சோனியா பிரதமராக முடியாமல் போனது. அப்போதுதான் காங்கிரஸின் அசலான இந்துத்துவ முகம் வெளிப்பட்டது. சோனியா எனும் நேரு / இந்திரா பாரம்பரியத்தின் காப்பாளர் ‘அந்நியர்’ ஆனார். அதாவது ‘பாரம்பரியமும்’ சேர்ந்தே அந்நியமானது. கட்சியின் பாரம்பரியத்தைத் தொடர தேவையாக இருந்த ‘அடையாளம்’ ஆட்சி என்ற தளத்திற்கு நகர முடியவில்லை. சோனியா, அவரது கடுமையான விமர்சகர்களால் இத்தாலியராக மட்டும் பார்க்கப்படவில்லை, கிறிஸ்தவராகவும் பார்க்கப்பட்டார். அவரது ஆக மோசமான விமர்சகரான ஜெயலலிதா, அவரை ‘சோனியா மொய்னோ’ என்ற கிறிஸ்தவப் பெயரால் மட்டுமே மேடைதோறும் விளித்தார். ஆக, சோனியா அவர்களுக்கு நேரு / இந்திரா வாரிசுரிமை மறுக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம் அவர் இந்து இல்லை என்பதும்கூட.

இந்து ஆதல்
இந்தியாவின் பிரதமராக இந்து அல்லாதவர் ஆவது அவ்வளவு வாய்ப்பான விடயமில்லை. மன்மோகன் சிங் பிரதமரானது இயல்பானதே, ஏனெனில் இந்தியாவில் சீக்கிய மதம் அந்நிய மதமாகக் கருதப்படுவதில்லை. இந்துத்துவமே அதனை இந்துவின் பகுதியாகவே கருதும். எனவே ராகுலின் பிரச்சினையே தன்னை ஒரு இந்துவாக மறுஉருவாக்கம் (Re-inventing) செய்வதுதான் என்றே தோன்றுகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை ஒரு பூணூல் அணிந்த பார்ப்பனராக அறிவித்துக்கொண்டதும், தேர்தல் பிரச்சாரங்களின் போது பல இந்து கோயில்களுக்குச் சென்றதும் இதன் பொருட்டு என்றே கருத வேண்டியுள்ளது. இந்த மறுஉருவாக்க முயற்சி அவரளவிலேயே உளப்பூர்வமானதாகவோ அல்லது உவப்பானதாக இருக்க முடியாது எனவே தோன்றுகிறது.
இந்த ‘இந்து ஆதல்’ என்பதே அவரது உள்ளார்ந்த விருப்பம் சார்ந்ததாகக் கருத வாய்ப்பில்லை. அந்த மொத்த பிரயத்தனமும் அவர்மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. அந்த ‘இந்து ஆதல்’ வழியாக அடைய நினைத்த ‘நேரு / இந்திரா பாரம்பரியமும்’ ஒருசேர தேர்தல் தோல்வி வழியாக நிராகரிக்கப்பட்டபோது அவர் முற்றிலுமாக நிலை குலைந்து போனாரெனத் தோன்றுகிறது.
அதிலும் பாரம்பரியத்தின் சின்னமெனக் (Absolute sign of Legacy) கருதக்கூடியதான ‘அப்பாவின் அமேதி’ தொகுதியில் கிடைத்த தோல்வி அவர்மீது மிக மோசமான வன்முறையான உளவியல் தாக்குதலை நிகழ்த்திவிட்டது என்றே தோன்றுகிறது. இந்த மொத்த முயற்சியும் வன்முறையாக நிராகரிக்கப்படுவது மோசமான அனுபவமாகவே இருக்கும். அதன் பொருட்டே எத்தனை வலியுறுத்தியும் ‘துறந்த தலைமையை’ மீண்டும் ஏற்க மறுத்துவிட்டாரெனத் தோன்றுகிறது. ராகுலைப் பொறுத்தவரை அவரது வாரிசுரிமை, சில அசாதாரண உள்முரண்கள் கொண்டதாகிப் போனது என்பதே விபரீதம். அதனால் தலையில் சூட்டப்பட்ட மகுடம் / உரிமை / பொறுப்பு முள்முடியாகிப் போனது. ஏற்கெனவே தயக்கமான பாவத்தில் இந்த முள்முடியை தரிக்கத் துணிந்தவரின் மீதான ஆழமான உளவியல் தாக்கம் / தயக்கம் கலைவது எளிதில்லை.
ராகுலின் வழி!
எனவே காங்கிரஸும், ராகுலும் மீள்வதற்கான வழி மீண்டும் ‘இந்து ஆதல்’, அதன்வழி அதிகாரபூர்வமான ‘வாரிசு ஆதல்’ என்பன போன்றவை அல்ல. மாறாக இந்த ‘ஆதல்’களைத் துறந்து காங்கிரஸின் ஒரே ஆதாரமான ‘மதச்சார்பின்மை’ கோட்பாட்டு நாயகனாவதே ராகுலுக்கு உகந்தது. பிறப்பு அடையாளங்கள் தீர்மானமானவை அல்ல. அவை மறுக்கப்படவும், மாற்றப்படவும் மட்டுமே. அதற்கான அரிய வாய்ப்பை இந்த அதிபயங்கரமான இந்துத்துவர்கள் வழங்கவே செய்கின்றனர். காஷ்மீரத்தில் அரங்கேற்றிய தனது மூன்றாவது பெருங்குற்றத்தால் (ஏற்கெனவேயான மாபெரும் குற்றங்கள் பணமதிப்பிழப்பு, அவசர ஜிஎஸ்டி) இந்தியாவுக்கு ஏற்படப் போகும் பாதகங்கள் குறித்த குறைந்தபட்ச அக்கறைகூட இல்லாமல் , 370ஐ மறுபடியும் கொண்டுவரத் தயாரா என்னும் மோடியை அதே தளத்தில் எதிர்கொள்வதே…
இன்னும் நீதிமன்றப் பரிசீலனையே (Judicial Review) நடைபெறாத நிலையில், ஏதோ முடிவுற்ற நடவடிக்கை போல வாய்வீசும் மனிதரை, அவரது குற்றங்களால் எதிர்கொண்டு சாய்ப்பதே ராகுலின் பாரம்பரியத்தின் நிரூபணமாக இருக்கும்.

அவரது பாட்டி இந்திராவும் ரேபரேலியில் தோற்றார் என்பதை நினைவில்கொள்ளுதல் நலம். பாரம்பரியங்கள் (Legacies) கொண்டாடப்பட்ட கீர்த்திகளோடு, பல ரகசிய வீழ்ச்சிகளையும் தோல்விகளையும் உள்ளடக்கியதே. அது அடையாளம் மட்டுமல்ல, அடையாள மீறலும் கூட.
கட்டுரையாளர் குறிப்பு: வீ.எம்.எஸ். சுபகுணராஜன்,இந்திய ஒன்றிய அரசின் வருவாய்த் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். திராவிட இயக்க ஆய்வாளர் / எழுத்தாளர். தமிழில் பெரியாரிய சிந்தனைகள் குறித்து எழுதி வருபவர். ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ பெரியாரின் சாதி சங்க மாநாடுகள் உரைத் தொகுப்பு நூலின் தொகுப்பாசிரியர், ‘சாதியும் நிலமும், காலனியமும், மூலதனமும்’, ‘சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும்’ நூல்களின் ஆசிரியர்.
