ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று (நவம்பர் 27) சிறைக்கு சென்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்ததாக ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி கூறினார். என் தந்தை இன்று 99 ஆவது நாளாக சிறையில் இருக்கிறார். நீதிமன்றக் காவலில் மட்டுமே இத்தனை நாட்கள் சிறை என்பது நமது சிஸ்டத்தின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. இன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் எனது தந்தையை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி என் தந்தையோடு மிக உறுதியாக இருப்பதான வலுவான செய்தியை இந்த சந்திப்பு சொல்லியிருக்கிறது” என்று இந்த சந்திப்பு பற்றி கூறியிருக்கிறார் கார்த்தி.
கடந்த ஆகஸ்ட் 21 ம் தேதி மத்திய புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்துக்கு, சிபிஐ பதிவு செய்த வழக்கில் இருந்து அக்டோபர் 22 அன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் இதே வழக்கிற்காக அமலாக்கத்துறை இயக்குநரகம் சிதம்பரத்தைக் கைது செய்தது. அடுத்தடுத்து அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்றோடு நீதிமன்றக்காவல் முடிந்து நீதிமன்றம் செல்வதற்கு முன்னர் ராகுலும், பிரியங்காவும் சிதம்பரத்தை சந்தித்தனர்.
ஏற்கனவே ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்த நிலையில் சுமார் நூறாவது நாள் சிறைவாசத்தை எட்டும் நிலையில் இன்று அவரை சந்தித்துள்ளார் ராகுல் .
