சாத்தான்குளம் கொடூரத்தைப் பற்றி திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். தேசிய ஊடகங்களிலும் இது செய்தியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னோடித் தலைவருமான ராகுல் காந்தி இந்தக் கொடூரத்தைக் கண்டித்து கருத்து வெளியிட்டார். இதனால் தேசிய அரசியலிலும் சாத்தான்குளம் எதிரொலித்தது.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரியிடம் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. சம்பவம் பற்றி ராகுலிடம் அழகிரி விவரித்த நிலையில், ‘நான் அந்த குறிப்பிட்ட கிராமத்துக்குச் சென்று அந்தக் குடும்பத்தைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார் அழகிரி. அதேநேரம், இப்போது ஊரடங்கு அமலில் இருப்பதாலும் தொற்று நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் ராகுல் சாத்தான்குளம் வருவதன் சாத்தியம் குறித்து இருவரும் விவாதித்திருக்கிறார்கள்.
தனி விமானமா, ஹெலிகாப்டரா என்பது வரை விவாதித்த நிலையில், பின்னர்தான் இப்போதைக்கு சாத்தான்குளம் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தார் ராகுல். அதேநேரம் அழகிரியிடம், ‘அந்தக் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி உதவ வேண்டும்’ என்று உத்தரவிட்டதோடு போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட இருவருக்கும் அஞ்சலி செலுத்துமாறு கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில்தான் 29ஆம் தேதி சாத்தான்குளத்துக்குச் சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போலீஸாரால் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இல்லத்துக்குச் சென்று ஆறுதல் கூறினார்.
**-வேந்தன்**
