கிச்சன் கீர்த்தனா: ராகி – பனீர் ஒப்பட்டு

Published On:

| By Selvam

Ragi - Paneer Oppattu Recipe

இந்திய இனிப்பு வகைகளில் ஒன்றான ஒப்பட்டு என்பது பூரண போளி, பூரணச்சி போளி, காட் போளி, பப்பு பக்‌ஷலு, பக்‌ஷலு, பொப்பட்டு என்று வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் கடைகளில் செய்து விற்கப்படும் இந்த ஒப்பட்டை நீங்களும் வீட்டில் செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை? Ragi – Paneer Oppattu Recipe

பனீர் துருவல், ராகி (கேழ்வரகு) மாவு – தலா 2 கப்

பொடித்த கருப்பட்டி – 3 கப்

தேங்காய் துருவல் – ஒரு கப் 

முந்திரி  (சீவியது) – கால் கப் 

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் 

நெய் – தேவையான அளவு

எண்ணெய், உப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது? Ragi – Paneer Oppattu Recipe

ராகி மாவுடன் கொஞ்சம் உப்பு, எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு  தளர பிசைந்து அப்படியே வைக்கவும். கருப்பட்டியை சுத்தம் செய்து, அதை பாகாக்கி கொள்ளவும். அதனுடன் பனீர் துருவல் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக வரும்போது… தேங்காய் துருவல், முந்திரி சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய்த்தூள், நெய், சேர்த்து நன்கு கிளறி எடுத்தால்… பூரணம் ரெடி.

பிசைந்து வைத்திருக்கும் ராகி மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து சின்ன கிண்ணமாக செய்து அதனுள் பூரணத்தை வைத்து மெல்லிய போளியாக வாழையிலையில் தட்டவும். தவாவில் சிறிது நெய் விட்டு போளியை போடவும். நன்றாக வெந்து சிவந்ததும், சுற்றிலும் நெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுக்க… சூப்பரான, சத்தான ராகி – பனீர் ஒப்பட்டு தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share