கல்லூரிகளில் சீனியர் மாணவ மாணவிகள் ஜூனியர்களை ராகிங் செய்யக்கூடாது என்றும், அப்படி செய்தால் இடை நீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் விதிகள் இருந்தாலும் ராகிங் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கையில் பூவை கொடுத்து ப்ரோப்போஸ் செய்ய சொல்வது, ரெக்கார்டு நோட்டுகளை எழுத சொல்வது என சின்ன சின்னதாக ராகிங் செய்து வந்த நிலையில் தற்போது ஆடைகளை களையச் சொல்வது, ஆடைகளை கிழிப்பது, படிக்கும் போது புத்தகத்தை மூடுவது, அரை நிர்வாணமாக நிற்க வைப்பது, மொட்டை அடிப்பது என எல்லையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது சில சீனியர் மாணவ மாணவிகளின் அட்டூழியம்.
இப்போதைய உதாரணம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி.
திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 100 மாணவ மாணவிகள் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
விடுதியில் தங்கி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் ராகிங் என்ற பெயரில் கொடுமைகளை செய்துள்ளனர்.
சில நாட்களில் நிலைமை சரியாகிவிடும், சீனியர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று புதிய மாணவிகள் பொறுமையோடு எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுள்ளனர்.
எனினும் ஒரு மாதத்திற்கு மேலாக ஜூனியர் மாணவிகளை இரவு நேரங்களில் சாப்பிட விடாமல், படிக்க விடாமல் தொல்லை கொடுத்துள்ளனர்.
சீனியர்கள் முன் வரக்கூடாது
இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், “இரவு இரண்டு மணி வரை ஜூனியர் மாணவிகளை கும்பலாக உட்கார வைத்து, தேவையற்ற கேள்விகளை கேட்டு குடைச்சல் கொடுக்கிறார்கள். இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் என்று கடுமையான உத்தரவுகளை போட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக முதலாமாண்டு மாணவிகள் வெள்ளை கோட் போட்டுக்கொண்டு சீனியர் எதிரே வரக் கூடாது.
இதில், கேரளத்தைச் சேர்ந்த பல சீனியர் மாணவிகளோடு சேர்ந்து ஒரு சில தமிழக மாணவிகளும் ராகிங் என்ற பெயரில் அட்டகாசம் செய்கிறார்கள்.
“இதை விட நல்ல ட்ரஸ் உன்கிட்ட இல்லையா? இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா” என கேட்டு ஆடைகளை கலைத்து ஜூனியர்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறார்கள்.
எதிரில் ஜூனியர்கள் வந்தால், சீனியர்கள் முன் வரக் கூடாது என உனக்கு தெரியாதா என்று மிரட்டுகிறார்கள். கருப்பாக இருக்கும் மாணவிகளை அழைத்து நிறத்தை வைத்து கிண்டல் செய்கிறார்கள்.
விடுதி வார்டன் இரவு 9 மணிக்கு அட்டனன்ஸ் எடுப்பது வாடிக்கை. அதை சீனியர் மாணவிகள் 8 மணிக்கு எடுக்கச் சொல்லி விடுதி வார்டன்களுக்கே உத்தரவும் போட்டிருக்கிறார்கள்.

சீனியர் மாணவிகளின் பேச்சைக் கேட்டு வார்டன்கள் 8 மணிக்கு அட்டனன்ஸ் போட்டுவிட்டு சென்று விடுவதால், அதன்பிறகு விடுதியில் சாப்பாடு கிடைப்பதில்லை. ஜூனியர்களை சீனியர் மாணவிகள் சாப்பிட விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்து இரவு 2 மணி வரை கொடுமைகளை செய்து வருகிறார்கள்.
ஜூனியர் மாணவிகள் இரவில் சாப்பிட முடியாமல், சரியாக தூங்க முடியாமல் இருப்பதால் அவர்களால் பகலில் கல்லூரியில் பேராசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்க முடியவில்லை.
பேராசிரியர்களிடம் விடுதியில் நடக்கும் ராகிங் கொடுமைகளை சொல்வதற்கு ஜூனியர் மாணவிகள் பயப்படுகிறார்கள். அப்படி சொன்னால் இங்கு படிக்கவே முடியாத அளவுக்கு செய்துவிடுவோம் என்று சீனியர்கள் மிரட்டுகிறார்கள்.
இதனால் முதலாம் ஆண்டு மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் சிதைந்துபோய்விடும் நிலை உள்ளது. தற்கொலை மனநிலைக்கும் செல்கிறார்கள் ” என்று கூறுகிறார்கள்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற லட்சம் லட்சமாய் கொட்டி செலவு செய்து படிக்க வைத்து, அதில் தேர்ச்சி பெற்று டாக்டர் என்ற பெரும் கனவுகளோடு கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் கல்லூரியில் ராகிங் காரணமாக படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதே நிலை நீடித்தால் குஜராத்தில் ஏற்பட்ட நிலை இந்தக் கல்லூரியிலும் ஏற்படும் என்று பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ராகிங் கொடுமையால் உயிரைவிட்ட மாணவர்
குஜராத் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் GMERS மருத்துவக்கல்லூரியில் அனில் மெதானியா என்ற 18 வயது இளைஞர் முதலாம் ஆண்டு சேர்ந்தார்.
மருத்துவராகும் எண்ணத்தோடு கல்லூரியில் சேர்ந்த மெதானியாவை கல்லூரி விடுதியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்தனர்.
‘இண்ட்ரோ’ என்ற பெயரில் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் நிற்க சொல்லியுள்ளனர். ஆனால் 18 வயதான மெதானியாவால் நிற்க முடியவில்லை.
உடல் தளர்ந்து ஒருக்கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே காவல்துறையினரிடம் அவர், ‘சீனியர் மாணவர்கள் உட்காரவிடாமல் தொடர்ந்து நிற்க வைத்ததால் தான் எனக்கு இப்படியாகிவிட்டது” என வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். இதனால் மெதானியாவை ராகிங் செய்த 15 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மெதானியாவின் மருத்துவர் கனவு ராகிங் எனும் கொடுமையால் முடிவுக்கு வந்தது, ஜூனியர் மருத்துவ மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் திருவாரூரிலும் ஆகிவிடக் கூடாது என்பதுதான் மாணவ மாணவிகள் பெற்றோர்களின் பதற்றம்.
சுகாதார அமைச்சகத்தின் மூலம் இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு வாய்வழி தகவலாக பெற்றோர்கள் மூலம் எடுத்துக் கூறியும் அங்கே நடக்கும் தவறுகளை கல்லூரி நிர்வாகம் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதைப்பற்றி இந்திய மாணவர் சங்கத்தின்(எஸ்.எப்.ஐ) மாநில செயலாளர் அரவிந்த சாமியை தொடர்புகொண்டு கேட்டோம்.
“தமிழகத்தில் திருவாரூர் மருத்துவ கல்லூரி, சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சில தனியார் மருத்துவ கல்லூரிகளில் மறைமுகமாக ராகிங் இருக்கத்தான் செய்கிறது.
நாங்களும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு கொடுத்தோம். அரசு அட்மிசன் நேரத்தில் மட்டும், ‘ராகிங் செய்யக் கூடாது’ என்று பெயரளவில் நோட்டீஸ் கொடுத்து, பலகைகள் வைக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் மத்தியில் முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1996ல் மாணவர் நாவரசு கொலைக்கு பிறகு அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ராகிங் தொடர்பாக அதிகபட்சமாக விழிப்புணர்வு கொடுத்து தடுத்து வந்தனர்.
ஆனால் மீண்டும் ராகிங் துளிர்விட்டு வருகிறது. இதை இப்போதே தடுக்க வேண்டும். ஒவ்வோரு கல்லூரியிலும் ராகிங்கை தடுக்க குழு இருக்கிறது. அந்த குழு செயல் இழந்து இருக்கிறது.
அந்த குழு மீண்டும் புத்துயிர் பெற்று செயல்பட்டு மாணவர்களுக்கு நல்லமுறையில் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். மாணவர்களின் மனநிலையை மாற்றாமல் எதுவும் செய்ய முடியாது” என்றார்.
கல்லூரி டீன் சொல்வது என்ன?
இதுதொடர்பாக மின்னம்பலம் சார்பாக திரூவாருர் அரசு மருத்துவ கல்லூரி டீன் ஜோசப் ராஜை தொடர்புகொண்டு, ராகிங் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம்.
அவர் கூறுகையில், “எங்கள் கல்லூரியில் 5 ஹாஸ்டல் பிளாக் உள்ளது. ஒவ்வொரு பிளாக்கிலும் 100 பேர் இருக்கிறார்கள். விடுதியில் ராகிங் நடப்பதாக சில நாட்கள் முன்புதான் வார்டன் ஒருவர் தெரிவித்தார்.
உடனடியாக இந்த ராகிங்கிற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசினோம். மாணவர்களையும் கண்டித்து எச்சரித்தோம்.
இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருப்பதற்காக வார்டனாக மாணவிகள் விடுதிகளுக்கு ஒரு பெண் மருத்துவரையும், மாணவர்களின் விடுதிக்கு ஒரு ஆண் மருத்துவரையும் இரு தினங்களுக்கு முன் நியமித்தோம்” என்றார்.
மேலும், “நீங்கள் சொன்ன சில தகவல்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, கண்காணித்து தவறுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கிறோம்” எனவும் கூறினார் டீன் ஜோசப் ராஜ்.
கண்டித்த நீதிமன்றம்

முன்னதாக, 2022ஆம் ஆண்டு வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. “கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம். ஒழுக்கம் இல்லாமல், மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை” என்று நீதிமன்றம் காட்டமாக தெரிவித்திருந்தது.
எனினும் ராகிங் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் செய்த டிஎஸ்பி மகன் உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
3ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் மீது பீர் பாட்டிலால் 5ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களான கவின், தியானேஷ் தாக்கியதால அவர்கள் மீது கீழ்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ராகிங்கால் ஏழை எளிய மாணவர்களின் கனவுகளை சிதைப்பதோடு, வழக்கு, சஸ்பெண்ட் என தங்களது படிப்புகளை கெடுத்துக்கொள்கின்றனர்.
மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் ராகிங் கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ஜூனியர் மாணவர்கள், பெற்றோர்களின் எதிர்பார்ப்பு…
கவனிக்குமா அரசு?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி, பிரியா
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு அரெஸ்ட் வாரண்ட்!
“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியவர்களுக்கு நன்றி” : கஸ்தூரி பேட்டி!
“புதிய வழிமுறை- இவர்களுக்கு சொத்துவரியை ஏற்றவில்லை” : அமைச்சர் நேரு
