வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களுக்கு கேரளாவிலும் தமிழ்நாட்டிலும்தான் நல்ல வரவேற்பு உண்டு.
சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். சில விஷயங்களில் மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாதான் பெஸ்ட். இது புரியாமல் ‘மலையாள சினிமா என்றால் எல்லாமே நல்ல படம்; தமிழ் சினிமா என்றால் எல்லாமே மொக்கை படம்’ என்ற ஓர் ஆட்டு மந்தை நினைப்பு நம்ம ஆட்களுக்கே உண்டு.
மலையாள படங்களில் கூட கதை வித்தியாசமாக இருந்தாலும் கதை சொல்லும் விதத்தில் ஒரே மாதிரியான தன்மை இருக்கும் ஆனால் தமிழ் சினிமாவில்தான் அதிலும் வெரைட்டி உண்டு.
அந்த வகையில், இயக்கி புரொடக்ஷன்ஸ் சார்பில், அனாமிகா ரவீந்திரநாத், அபிஷேக் ரவீந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் ‘ரேஜ்’.
ரேஜ் என்பது கடுங்கோபம், ஆத்திரம், வெறி, சீற்றம், மூர்க்கம் இப்படி கோபத்தின் உச்சகட்ட நிலை. இது அநீதி அல்லது காயத்துக்கு பதிலடியாக பெரும் சினத்தோடு கட்டுக்கடங்காத நடத்தை அல்லது வன்முறையாக வெளிப்படும்.
வீடியோ கேம்களை ஆடும்போது ஏற்படும் அதீத கோபத்தை கேம் ரேஜ் என்பார்கள். வெப்சைட்களில் பயனர்கள் பொறுமை இழந்து ஒரே இடத்தில் இடத்தில் மீண்டும் மீண்டும் கிளிக் செய்வது ரேஜ் கிளிக்ஸ் எனப்படும்.
அமெரிக்காவில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு இசை வடிவத்துக்கும் ரேஜ் என்று பெயர். ஃபேஷன் ட்ரெண்டிங் விஷயமாக ஏற்படும் கோபம் கூட ரேஜ் தான்.
இவற்றில் ஒன்றோ இரண்டோ அல்லது எல்லாமுமோ சேர்ந்தோ இந்த ரேஜ் படத்தின் சம்பவங்கள் இருக்கலாம்.
சென்னையில் வாடகை கார் ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன்.
புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பவன், ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
நாயகன் ஷான் அடிப்பட்டு ரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், கவனிக்க வைக்கிறது.
சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
ரேஜ் படத்தின் ரேஞ்ச் என்ன? விரைவில் தெரிய வரும்.
— ராஜ திருமகன்
