ஆயுத பூஜை இன்று இந்தியாவில் கொண்டாடப்படும் நிலையில் இந்தியா சார்பில் பிரான்ஸ் நாட்டில் ஆயுத பூஜை வேற லெவலில் கொண்டாடப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா ரஃபேல் போர் விமானங்கள் இறக்குமதி செய்யும் விவகாரம் கடந்த மோடி ஆட்சிக் காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் மோடியின் இரண்டாம் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ரஃபேல் விவகாரம் பற்றிய பரபரப்பு குறைந்தது. ஒப்பந்தப்படி பிரான்ஸ் நாட்டிடமிருந்து முதல் ரஃபேல் விமானத்தைப் பெறுவதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து முதன்முறையாக வாங்கும் ரஃபேல் விமானத்துக்கு அங்கேயே ஆயுத பூஜை கொண்டாடுகிறார் என்பதுதான் கூடுதல் விசேஷம்.
ராஜ்நாத் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே அமைச்சராக இருந்தபோதும்கூட தனது அமைச்சரவை அலுவலகத்தில் ஆயுத பூஜையைச் சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்த வகையில் அவர் ரஃபேல் விமானங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடுவது என்ற முடிவு இணைய வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 590 கிலோமீட்டர் தூரத்தில் மெரிக்னா பகுதியில் நாளை நடக்கும் ரபேல் விமான ஒப்படைப்பு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் உடன் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ப்ளோரண்ட்ஸ் பார்லி கலந்துகொண்டு அவரும் ரஃபேல் விமானத்துக்கு ஆயுத பூஜை கொண்டாடுவார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகச் செய்தி தொடர்பாளர் பரத் புருஷன் பாபு தெரிவித்துள்ளார். இந்திய பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், டசால்ட் ஏவியேஷன் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் 36 ரஃபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் முறைப்படி ஒப்படைத்தாலும், அடுத்தடுத்த நிர்வாக நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின் அடுத்த ஆண்டு மே மாதத்தில்தான் முதல் ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வரும்.