கடைசி போட்டியில் தோல்வி… பெடரருடன் சேர்ந்து கதறி அழுத நடால்!

Published On:

| By christopher

லேவர் கோப்பையில் தனது கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, சர்வதேச டென்னிஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக ரோஜர் பெடரர் நேற்று (செப்டம்பர் 23) ஓய்வு பெற்றார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் போல், சர்வதேச டென்னிஸ் களத்தில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் ரோஜர் பெடரர். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள ரோஜர் பெடரர், லேவர் கோப்பை 2022 தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

அதன்படி லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் கோப்பை தொடரில் சக ஐரோப்பிய வீரர்களான ரபேல் நடால், ஜோகோவிச், ஆண்டி முர்ரே ஆகியோருடன் பங்கேற்றார்.

தோல்வியில் முடிந்த கடைசி போட்டி!

ADVERTISEMENT

நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், ரபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜாக் சாக் ஜோடியுடன் மோதினார்.

இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் ஜோடி 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்த தொடரில் பெடரர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கவில்லை. இதனால் டென்னிஸ் களத்தில் பரம எதிரியாக பார்க்கப்பட்டு வந்த நடாலுடன் இணைந்து தனது கடைசி போட்டியை சந்தித்தார். அதில் தோல்வியடைந்ததை அடுத்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார் ரோஜர் பெடரர்.

ADVERTISEMENT

ரோஜருடன் அழுத நடால்!

என்ன தான் களத்தில் வீரர்களாக மோதி கொண்டாலும், களத்திற்கு வெளியே நடால்-பெடரர் இருவருமே சிறந்த நண்பர்களாக அறியப்படுகின்றனர். இந்நிலையில் போட்டிக்கு பின்பு பெடரர் ஓய்வு பெற்றதை எண்ணி அவருக்கு அருகே ரபேல் நடால் கண்கலங்கிய காட்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ரோஜர் பெடரர் பேசுகையில், “இது ஒரு அற்புதமான நாள், எனது கடைசி சர்வதேச டென்னிஸ் போட்டியை ரஃபாவுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஓய்வு குறித்து வருத்தமாக இல்லை. என்னை சிறந்த வீரனாக உணர செய்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் இருக்க கூடிய ரசிகர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

இதனையடுத்து டென்னிஸ் உலகின் மகத்தான வீரர்களில் ஒருவரான ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ரோஜர் ஃபெடரர் ஓய்வு: உருகும் சர்வதேச ஜாம்பவான்கள்!

பொன்னியின் செல்வன் -நானே வருவேன்: அதிக தியேட்டர்கள் யாருக்கு? உதயநிதி கையில்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share