மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’.
படைவீரன் திரைப்படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராதிகா, சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடகர் சித் ஸ்ரீராம் இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று(ஜனவரி 23) மாலை சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, “இயக்குநர் தனா, இந்த படத்தில் நானும் சரத்குமாரும் நடிக்க வேண்டும் என முதலில் கேட்டுக்கொண்ட போது, சரத்குமார் தான் படத்தின் கதை கேட்டுவிட்டு, நன்றாக இருக்கிறது என்று முதலில் கூறினார். அதன்பின்னர்தான் நான் படத்தின் கதையை கேட்டேன். அவருக்கு வேலையின் மீதான அதீத ஆசை என்னை மிகவும் கவர்ந்தது. தனாவுக்கு இந்த கதையின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கதையை எங்களில் கூறும்போதே அத்தனை உணர்ச்சிகரமாகக் கூறினார். நாங்கள் நிறைய திரைப்படங்கள் நடித்துவிட்டோம். ஒவ்வொரு படத்தின் களம் வேறு வேறாக இருக்கும், இது போன்ற தேர்ந்த புரிதலுடன் இருக்கும் களத்தில் நடிப்பது புதிதாக உள்ளது.” என்று கூறினார்.
மேலும் இயக்குநர் மணிரத்னம் குறித்துக் கூறும்போது, “மணி தெரியாத்தனமா என்னை பரதநாட்டிய டான்ஸராக அவருடைய இரண்டாவது படத்தில் போட்டுவிட்டார். அவர் பட்ட கஷ்டம் அவருக்கு தெரியும், எனக்கு தெரியும். அவர் ஒரு கட்டத்தில் அழுதே விட்டார். ஒரு புள்ளிக்குப் பின்னர் தற்போதும் அவர் அழுதுகொண்டிருக்கிறார். நானும் அவரிடம் கேட்டேன் ஏன் என்னை பரதநாட்டிய டான்ஸராக நடிக்க வைத்தீர்கள் என்று. அவர் அதற்கு ‘இட்ஸ் ஓக்கே’ என்று இரண்டே வார்த்தைகளில் பதிலளித்தார். அதன்பின் அவருடைய அனைத்து கதைகளிலும் நான் தான் நடிக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் இந்த ஐஸ்வர்யா ராய் இரண்டு இன்ச் என்னைவிட கம்மி என்பதால் அவரை வைத்தே படம் எடுத்துவிட்டார். இப்போது கூட அவரிடம், பொன்னியின் செல்வன் படத்தில் நான் பெட்டராக இருப்பேன் என்று கூறினேன். மீண்டும் ஏதோ இரண்டு இன்ச் வித்தியாசத்தில் என்னை தவிர்த்துவிட்டார் மணி. இந்த படத்தில் சிறந்த அனுபவங்களை எங்களுக்குத் தந்ததற்காக நன்றி” என்றும் தெரிவித்தார்.
அவர் பேசியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
