சசிகுமார்-நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் ராஜவம்சம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(மார்ச் 5) சென்னையில் நடைபெற்றது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ராதா ரவி, நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகிபாபு, ரேகா, மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட முக்கிய திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்தும், படக்குழுவினர் குறித்தும் உரையாற்றினார்.
அவர் பேசும் போது, “நான் எது பேசினாலும் சர்ச்சை என்று கூறுகிறார்கள். என் பேச்சு புரியாதவர்களுக்கு அது சர்ச்சை, புரிந்தவர்களுக்கு ஓகே.” என்று கூறிப் பேசத்தொடங்கினார். படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களைக் கூறிய அவர், படத்தின் கதாநாயகன் சசிகுமார் பற்றி பேசும் போது, **“பொதுவாக எல்லா திரைப்படங்களிலும் கதாநாயகன் டேட்டைப் பொறுத்து எங்கள் படப்பிடிப்பு அமையும். ஆனால் இந்தப்படத்தில் மட்டும் எங்கள் டேட்டைப் பொறுத்து ஹீரோ டேட் கொடுத்தார். படத்தில் மட்டும் தான் வீரன், சூரனாக நடிக்கிறாரே ஒழிய, நிஜத்தில் சசிகுமார் ரொம்ப தங்கமான பிள்ளை.**
**ஆனால் சினிமாவுக்கு அவர் லாயக்கில்லாதவர். ஏனென்றால் தலையை கீழே குனிந்தே நடக்கிறார். அப்படியா போவது. பந்தாவாக போக வேண்டாமா? அதையே பார்த்துப் பழகியதால் இவர் ஒழுங்காக நடப்பதைப் பார்க்கும் போது அசிங்கமாகத் தெரிகிறது. புரட்சித் தலைவர், நடிகர் திலகத்திற்கே பாடிகார்ட் கிடையாது. இப்போதைய நடிகர்கள் ஆறு பாடிகார்டுடன் வருவதால் தான் அவர்கள் படத்தைப் பார்க்க யாரும் வருவதில்லை.”** என்று கூறினார்.
மேலும் படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி குறித்துப் பேசும் போது, “இந்த பொண்ணு எல்லா விஷயத்துக்கும் பொருந்துற பொண்ணு. இதே மாதிரி தான் அன்னைக்கும் சொன்னேன்.” என்று நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் “நான் மட்டும் இந்தி மொழி கற்றிருந்தால், பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஹிந்தி தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயை நேரில் பார்த்து பேசியிருப்பேன்” என்று கூறியதுடன் “ராதாரவி எப்போதுமே முகமூடி போடாதவன்” என்றும் தன்னைப்பற்றி அவர் தெரிவித்தார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
