ADVERTISEMENT

4 தொகுதி இடைத்தேர்தல்: 500 கோடி கூடுதல் செலவு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் காலியாக இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் மே மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பணம் 500 கோடி கூடுதலாக செலவிடப்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே மீதமுள்ள தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்தை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் வழக்குகள் காரணமாக தேர்தல் நடத்தவில்லை என ஆணையம் அறிவித்தது. இது தொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததோடு, தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் மே 19 ஆம் தேதி நான்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திமுக தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக 4 தொகுதி இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் வாக்குமூலம் தாக்கல் செய்தது. இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் திமுகவின் கோரிக்கையை ஏற்று விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது. இந்தப் பின்னணியில் தற்போது நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சட்டப்படி நடத்த வேண்டிய தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி தான் தேர்தல் நடத்த வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெறவுள்ள ஏப்ரல் 18ந் தேதியே நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தியிருந்தால், தற்போது தனியாக தேர்தல் நடத்துவதால் ஏற்படும் சுமார் ரூ. 500 கோடி தேர்தல் செலவை தமிழக அரசு மிச்சப்படுத்தியிருக்க முடியும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் சேர்த்து 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று, மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்து, திமுக வேட்பாளர்கள் அபரிமிதான வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் புதிய ஆட்சி ஏற்படுவதும் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது” என்றும் கூறியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share