ஆட்சியில் பங்கு கேட்பவர்களுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

rs bharathi

ஆட்சியில் பங்கு என்று கேட்டவர்கள் அனைவரும் இப்போது ‘சீட் கொடுத்தால் போதும்’ என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என திமுக அமைப்புச் செயலார் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, மாணிக்கம் தாகூர் எம்பி ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தி தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன், இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், காங்கிரஸுக்கும் தெரியும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆனால், தொடர்ச்சியாக மாணிக்கம் தாகூர் எம்.பி தனது எக்ஸ் பதிவில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இன்று அவர் தனது எக்ஸ் பதிவில், “2021-இல் 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வெற்றி. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களைத் தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று (பிப்ரவரி 14) திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “கார்கே, ராகுல், செல்வப்பெருந்தகை ஆகியோர் கேட்டால் பதில் சொல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதியிடம், “திமுக தோல்வி பயம் காரணமாக ரூ.5000 கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எதிர்க்கட்சிகள் அப்படித்தான் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. நாங்கள் இப்போது கொடுக்கவில்லை; மாதம்தோறும் ரூ.1000 கொடுத்து வருகிறோம். அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தைத் தடுக்க சதி திட்டம் தீட்டினார்கள். அந்த சதித் திட்டம் முதல்வருக்கு தெரிந்ததால், அதற்கு தடை வாங்கிவிடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே பணத்தைக் கொடுத்துள்ளார்” என்றார்.

அப்போது, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று முதலமைச்சர் அறிவித்த பிறகும், காங்கிரஸில் உள்ள தலைவர்கள் அது தொடர்பாக மீண்டும் பேசுவது குறித்த கேள்விக்கு, “நாளை முதல் பேச மாட்டார்கள். ரூ.5000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அதனால் இனி பேச மாட்டார்கள். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் கிடையாது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ராகுல் காந்தி முதல் மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

ADVERTISEMENT

காங்கிரஸில் ராகுல் காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை ஆகிய மூன்று பேர் தான் அத்தாரிட்டி. இவர்கள் மூன்று பேர் கேட்டால் பதில் சொல்லலாம். எல்லோரும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. ஆட்சியில் பங்கு என்று கேட்டவர்கள் அனைவரும் இப்போது ‘சீட் கொடுத்தால் போதும்’ என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share