தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் நேற்று (ஜூன் 20) முதல் அடுத்த மாதம் ஜூலை 20ஆம் தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று எழும்பூர் மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ,
“தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு கவர்னர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.
ஜூன் 14ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம்.
ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான். குடியரசு தலைவர் உரை இந்திய அரசு தயாரிக்கும் உரை தான்.
ஆனால் பெரியார், அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல் விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா? மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார். அது பற்றி இவருக்கு என்ன தெரியும்? அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார்.

முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்தபோது அவர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்க்கட்சித் தலைவரா?,
கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது? ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.
தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால்தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
நாகாலாந்தில் இதே நாச வேலை செய்தார் அவர்கள் துரத்திவிட்டார்கள். கையெழுத்து எல்லோரிடமும் பெற வேண்டும் இது அரசியல் காரணத்துக்கு இல்லை. தமிழ் நாட்டின் நன்மைக்கு என்று சொல்லுங்கள்.
எங்கெங்கு கையெழுத்து வாங்க முடியுமோ அங்கு எல்லாம் கையெழுத்து வாங்குங்கள், வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் வாங்குங்கள். இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம்.
தி.மு.க. தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ பேசினார்.
ராஜ்
