பேட் கேர்ள் – ஆர்.கே.செல்வமணி சொன்னது என்ன?

Published On:

| By Kavi

’ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, அது குறித்த சர்ச்சைகள் கிளம்புவது புதிதல்ல. சில நேரங்களில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படக்குழுவினர் மேற்கொள்ளும் சில விளம்பரங்களே, அதற்கு எதிரானதாக மாறியதை நாம் அறிவோம். வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ டீசர்ர் கிளப்பியிருக்கும் சர்ச்சை அத்தகையதுதானா? இந்த கேள்வி சில நாட்களாக திரையுலகில் உலா வருகிறது. R.K. Selvamani say about ‘Bad Girl’

இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வர்ஷா பரத் இயக்குனராக அறிமுகமாகிற திரைப்படம் ‘பேட் கேர்ள்’.

அஞ்சலி சிவராமன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சாந்திபிரியா, ஹ்ருது ஹாரூன், டீஜே அருணாச்சலம், சஷாங், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்திருக்கிறார். இயக்குனர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இதனைத் தயாரித்துள்ளனர்.

பதின்ம வயதில் இருக்கும் ஒரு பள்ளி மாணவிக்கு எதிர்பாலின ஈர்ப்பு ஏற்படும் முதற் புள்ளிகளில் தொடங்கி பாலியல் சுதந்திரம் என்பது தன்னை மட்டுமே சார்ந்தது என்று அவர் உரத்த குரலில் சொல்வது வரை பல விஷயங்களைப் பேசியிருந்தது ‘பேட் கேர்ள்’ டீசர்.

பள்ளி மாணவ மாணவியரைத் தவறாக வழி நடத்தும் என்ற குற்றச்சாட்டு சிலரால் முன்வைக்கப்பட்டது. அம்மாணவி குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவராகக் காட்டப்பட்டது இழிவானது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேநேரத்தில், அதற்கு ஆதரவான கருத்துகளும் சமூகவலைதளங்களில் வலம் வந்தன.

’நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பதின்ம வயது ஆண், பெண் எதிர்கொள்கிற, குழந்தைப் பருவத்தில் இருந்து பெரியவர்களாக மாறுகிறபோது நிகழ்கிற, காலம்காலமாக மனித குலம் சந்திக்கிற சில விஷயங்களையே இப்படம் பேசுகிறது’ என்றனர் சிலர்.

‘டீசரில் தற்கொலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் இடமே தவறாகத் தெரிகிறது’ என்று தெரிவித்திருந்தனர் சிலர்.

ஒருகட்டத்தில் ’பேட் கேர்ள்’ டீசருக்கு எதிரான கருத்துகள் பொங்கிப் பெருக, அப்படமே வெளிவருமா என்ற கேள்வியை விஸ்வரூபமெடுக்க வைத்தது.

’இந்தப் படத்தில் மிக தைரியமாகப் பல விஷயங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன’ என்று ‘பேட்கேர்ள்’ படத்தைப் பார்த்துவிட்டு தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

நேர்மறையான, எதிர்மறையான கருத்துகள் அலையெனப் பரவினாலும், ஒருகட்டத்தில் ‘பேட் கேர்ள்’ குறித்த செய்திகளே இல்லை எனும் நிலை உண்டானது. இனி அப்படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில்தான், ‘பேட் கேர்ள்’ குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் மூத்த இயக்குனரான ஆர்.கே.செல்வமணி.

“ஒரு திரைப்படத்தை முழுதாகப் பார்க்காமல், அது சரியா தவறா என்று கருத்து கூறுவது அரைவேக்காட்டுத்தனம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், ‘சில நேரங்களில் ரசிகர்களிடம் ‘ஸ்பார்க்’கை உருவாக்குவதற்காக டீசரில், ட்ரெய்லரில் சில விஷயங்களைச் சேர்ப்பது வழக்கம். படத்தை முழுமையாகப் பார்த்தபிறகே நமது கருத்துகளைச் சொல்வது சரியாக இருக்கும்’ என்றிருக்கிறார். கூடவே, பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படத்தின் டீசர் வெளியிட்டால் இதைவிட நூறு மடங்கு எதிர்ப்பு இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

குக்கரில் சாதம் பொங்கும்போது மேலே வரும் அரிசியைப் பார்த்துவிட்டு ‘இது வேகவில்லை’ என்று சொல்வது சரியாக இருக்காது என்று கூறியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி.

இந்த ஆண்டில் நடைபெறும் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘பேட் கேர்ள்’ பங்கேற்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், அப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படுமா என்ற கேள்வி சில ரசிகர்களால் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.

’பேட் கேர்ள்’ படக்குழு விரைவில் இதற்குப் பதில் சொல்லும் என்று எதிர்பார்க்கலாமா? R.K. Selvamani say about ‘Bad Girl’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share