ஒரு நல்ல படம் எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி தரமான படம் எடுத்திருக்கிறார், வஞ்சகர் உலகம் திரைப்படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா என்று நடிகை சாந்தினி தமிழரசன் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பு அதன் 25நிமிட காட்சிகள் ஊடகத்துக்கும், படத்தை மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கும் போட்டு காட்டுவது வழக்கம். அந்த வழக்கம் இப்போது தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கிறது. அதை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி. தான் நடிக்கும் படங்களில் முதல் 25 நிமிட காட்சிகளை வெளியிட்டு வருகிறார். இதே போல் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான இரும்புத்திரை படமும் அவ்வாறே காட்சிப்படுத்தப்பட்டது.
தற்போது அந்த பாணியில் வருகிற 7ஆம் தேதி வெளிவர இருக்கும் வஞ்சகர் உலகம் படத்தின் 25நிமிட காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. லாபிரிந்த ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் வஞ்சகர் உலகம். குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.
இந்நிகழ்வில் இயக்குநர் மனோஜ் பீதா பேசும்போது, “கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் திரைக்கதை எழுத மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக எடுத்துக் கொண்டோம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் இருந்தன. சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதுதான் இந்த படம். மேற்கத்திய தாக்கத்தில் படம் இருக்க திட்டமிட்டு உழைத்தோம். நான்கு மணி நேரம் இருந்த படத்தை எடிட் செய்து இரண்டு மணி நேர படமாக மாற்றியிருக்கிறோம். படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’சான்றிதழ் வழங்கியுள்ளது என்றார்.
நாயகி சாந்தினி தமிழரசன் பேசுகையில், “வஞ்சகர் உலகம் ஒரு கேங்ஸ்டர்ஸ் படம். நிறைய ஆண் கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலுமே, பெண் கதாபாத்திரம் ஒன்றும் லீடாக வைத்த இயக்குநருக்கு நன்றி. ஒரு நல்ல படம் எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி தரமான படம் எடுத்திருக்கிறார். படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவு. நிறையப் படங்களுக்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். இருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு தனிச்சிறப்பை பெற்று தரும். என்னுடைய நடிப்பிற்கு முதலில் பாராட்டு தெரிவித்தது அவர்தான். குரு சோமசுந்தரத்துடன் நடிக்கும் போது அவ்வளவு விஷயங்கள் கற்று கொண்டேன். பிரிலியண்ட் ஆக்டர்” என்றார்