ட்விட்டரில் சர்ச்சை கருத்து: ஏழாண்டு சிறை!

Published On:

| By Balaji

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் கணக்குகளை நீக்காவிட்டால், அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள் இருப்பதாகவும், அதை நீக்க அந்நிறுவனத்திற்கு மத்திய தொழில்நுட்ப மற்றும் சட்டத்துறை கடிதம் அனுப்பியது. அதில், ட்விட்டரில் சில பதிவுகள் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக உள்ளன, அவற்றை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், இதுவரை பதிவுகள் நீக்கப்படவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுபோன்று ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மெத்தனம் காட்டி வந்தால், தொழில்நுட்ப சட்டம் 69A-வின்படி நடவடிக்கை எடுக்க நேரிடும். அச்சட்டத்தின்படி, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பல கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஆகிய நிறுவனங்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

“இந்திய சட்டத்தின் கீழ் இணைய நிறுவனங்களை கொண்டு வருவதற்கு தொழில்நுட்ப சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவரும் வேலையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதிலுள்ள திருத்தங்களின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் கொண்ட எந்த ஆன்லைன் நிறுவனத்துக்கும் நிரந்தர பதிவு அலுவலகம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சட்டபூர்வமான உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏதாவது தகவல் கேட்டால், 72 மணி நேரத்திற்குள் அரசுக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அல்லது சைபர் வழக்குகளில் தகவல்கள் தேவைப்படும்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மத்திய தொழில்நுட்ப மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share