இந்தியா-தெ.ஆப்பிரிக்கா டி20: மழை விளையாடுமா?

Published On:

| By Balaji

இன்று தர்மசாலாவில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி, பெய்து வரும் கனமழையால் இன்றைய ஆட்டம் தடைபடுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. செப்டம்பர் 15ஆம் தேதி(இன்று) முதல் டி20 ஆட்டம் தர்மசாலாவிலும், இரண்டாவது டி20 ஆட்டம் 18-ம் தேதி மொஹாலியிலும் 3-வது டி20 ஆட்டம் 22-ம்தேதி, பெங்களூருவிலும் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரையும், புனேவில் இரண்டாவது டெஸ்ட் 10 முதல் 14 வரையும், ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் 19 முதல் 23 வரையும் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், புதிய கேப்டன் குவிண்டன் டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் தர்மசாலாவில் இன்று நடைபெறும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளது.

இந்திய அணியில்: ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி(கேப்டன்), மணீஷ் பாண்டே / அய்யர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, ஜடேஜா / ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்க அணியில்: டி காக் (கேப்டன்), ரீஸா ஹென்றிக்ஸ், தெம்பா பவுமா, ராசி வன் டெர் டியூசன், டேவிட் மில்லர்,ஆண்டில் பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ், ஜோன் ஃபோர்டுயின் அல்லது ஜார்ஜ் லிண்டே, கேகிசோ ரபாடா, ஜூனியர் டாலா, தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக தர்மசாலாவில் மழை பெய்து வரும் நிலையில், முதல் டி 20 போட்டி நடைபெறும் மைதானம் முழுவதும் ஈரமாகியுள்ளது. நேற்று(செப்டம்பர் 14) மைதானத்தில் நடைபெறவிருந்த இந்திய அணியின் பயிற்சி, மழையினால் பாதிக்கப்பட்டு உள்-அரங்கிலேயே நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், தர்மசாலாவில் இன்று(செப்டம்பர் 15) பிற்பகலில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி நடைபெறுவது குறித்து பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. போட்டி இன்று மாலை 7 மணியளவில் தொடங்கவுள்ளது.

போட்டி நடைபெறும் இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தரமான வடிகால் வசதி உள்ளதால், மாலை 5 மணிக்குள் மழை நின்றாலும் முழு 40 ஓவர் விளையாட்டுக்கு மைதானத்தை தயார் செய்யலாம். ஆனால், மழை விட்டு விட்டுப் பெய்வதால், ஸ்டேடியத்திலுள்ள ஊழியர்களுக்கு தரையை போட்டிக்கேற்றவாறு தயார்படுத்த போதுமான நேரம் கிடைப்பதில்லை.

மாலையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. போட்டி இன்று மாலை 7 மணியளவில் தொடங்கவுள்ளதால், போட்டி முழுமையாக நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. வீரர்களுடன் சேர்ந்து மழையும் இன்று விளையாடுமா என இனி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share