rஆளுநர் அழுத்தம் கொடுக்கவில்லை: டி.ஆர்.பாலு

Published On:

| By Balaji

திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஆளுநர் கைவிடச் சொல்லவில்லை என்று திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் இந்தி பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகம் முழுதும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. இதற்கிடையில் செப்டம்பர் 18 ஆம் தேதி மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார். இதன் பின் திமுக நடத்த இருந்த ஆர்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

அமித் ஷா தன் கருத்துக்கு விளக்கம் அளித்துவிட்டதால், ஆளுநரின் உறுதிமொழி காரணமாகவும் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், திமுகவுக்கு கொடுக்கப்பட்ட நிர்பந்தங்கள் காரணமாகத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று செய்திகள் பரவின. இது குறித்து திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடச் சொல்லி ஆளுநர் அழுத்தம் கொடுத்தார் என்று பரப்பப்படும் செய்திகள் அபத்தமானவை. நாங்கள் இதுபோன்ற அபத்தங்களுக்கு என்றைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நாங்கள் ஆளுநரை சந்திப்பதற்கான எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. ஆளுநர்தான் எங்கள் தலைவரை சந்திப்புக்காக அழைத்தார்.

அந்த சந்திப்பின்போது போராட்டத்தைக் கைவிடச் சொல்லி ஆளுநர் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி தொடர்பான பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.மத்திய அரசுக்கு இந்தியைத் திணிக்கும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதை நானே மத்திய அரசின் பிரதிநிதியாக உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்றுதான் ஆளுநர் எங்களிடம் கூறினார். மற்றபடி ஆளுநர் எங்களுக்கு அழுத்தமும் கொடுக்கவில்லை” என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆளுநர் மாளிகையிலேயே எங்களது போராட்ட அறிவிப்பினை திரும்பப் பெறுவதாக நாங்கள் சொல்லவில்லை. உடனடியாக அறிவாலயம் வந்த தலைவர், சக நிர்வாகிகளோடு ஆலோசித்தார். அப்போது அமித் ஷாவுக்குத் தெரியாமல் ஆளுநர் இந்த விஷயம் பற்றி நம்மோடு பேசியிருக்க மாட்டார் என்று கூறினோம். மேலும், திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசுவது என்பது திமுகவுக்கு மத்திய அரசு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதற்கான சான்று என்று விவாதித்தோம். அதன் பிறகே போராட்டம் ஒத்திவைப்பு முடிவை மேற்கொண்டோம்” என்றார் டி.ஆர்.பாலு.

மேலும், “இந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் எவ்வித பெரிய போராட்டங்களும் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு நினைத்திருக்கக் கூடும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் டி.ஆர்.பாலு.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share