இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ஆம் தேதி, தனது 96-ஆவது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று (செப்டம்பர் 19) இரவு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ,அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், உள்ளிட்டோர் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராணியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, உலகம் முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் லண்டன் நகருக்கு வந்துள்ளனர்.

இந்திய நேரப்படி, இன்று (செப்டம்பர் 19) காலை 11 மணி வரை மட்டுமே ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும்.
12.30 மணியளவில், வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தில் உலகத்தலைவர்கள், சிறப்புப் பிரதிநிதிகள் அமரவைக்கப்படுவார்கள்.
பிற்பகல் 3.10 மணியளவில் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்திலிருந்து, ராணியின் உடல் அரசு மரியாதையுடன் மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹேரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பின்தொடர பீரங்கி வண்டியில் வெஸ்ட்மினிஸ்டர் அபேவுக்கு கொண்டு செல்லப்படும்.
வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் ராணிக்கான இறுதிப் பிரார்த்தனை தொடங்கும்.
இந்தப் பிரார்த்தனையில் உலக தலைவர்கள் உள்பட ராணியின் குடும்ப உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்.
மாலை 4.25 மணியளவில் பிரார்த்தனை நிறைவடைந்ததும், பிரிட்டன் முழுவதும் ராணிக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.
மாலை 4.45 மணியளவில் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிலிருந்து பக்கிங்ஹாம் வழியாக ஹைட் பூங்கா முனையில் உள்ள வெலிங்டன் ஆர்ச்சுக்கு ராணியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

இரவு 7.40 மணியளவில் விண்ட்சர் மாளிகை நோக்கி சுமார் 5 கி.மீ ராணியின் உடல் நடந்தே ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்.
இரவு 8.30 மணியளவில் ராணியின் உடல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
மகாராணியின் சிறப்புப் பிரார்த்தனை ஆராதனையில் 800 பேர் கலந்து கொள்கின்றனர்.
நல்லடக்க ஆராதனை முடிவடைந்தவுடன் நள்ளிரவு 12 மணிக்கு, அரச குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கும் இறுதிச் சடங்கிற்குப் பிறகு மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் அவரது கணவர் பிலிப்பிற்கு அருகே நல்லடக்கம் செய்யப்படும்.
ராணியின் இறுதிச்சடங்கை இங்கிலாந்தில் உள்ள 125 திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ராணியின் இறுதிச்சடங்கில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராணி எலிசபெத் மறைவால் இங்கிலாந்து முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
செல்வம்
ராணி எலிசபெத்தும் இந்திய பிரதமர்களும் : நேரு முதல் மோடி வரை!
