அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து: 14 வருட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?

Published On:

| By Aara

14 வருடமாக நடந்த வழக்கில் இருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் மூத்த அமைச்சரான ஐ.பெரியசாமி.

2006-11 திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி மீது ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாஃபர் சேட் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிலங்களை முறைகேடாக ஒதுக்கியதாக 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. quashes chargesheet against Minister I. Periyasamy

இந்த வழக்கில் பெரியசாமிக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (டிவிஏசி) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) ரத்து செய்தது.

சென்னையில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

2022 இல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை குவாஷ் செய்ய வேண்டுமென மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஐ.பெரியசாமி தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன்,

” 2022 ஆம் ஆண்டு உத்தரவின்படி குற்றம்சாட்டப்பட் ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேர் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனவே, தற்போது, ​​இந்த வழக்கில் விசாரிக்கப்படும் ஒரே நபர் அமைச்சர் ஐ.பெரியசாமிதான். இது சூழ்நிலையால் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம், எனவே, இந்த குவாஷ் மனு விசாரணைக்கு உகந்தது.

மேலும் குற்றவியல் சதி போன்ற குற்றச்சாட்டுகளை கொண்ட வழக்கில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும். ஒரே ஒருவருக்கு எதிராக அவற்றை சாட்ட முடியாது .

சந்தை விலை அடிப்படையில் மட்டுமே நிலங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படாததால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த அர்த்தமும் இல்லை.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது அவர் ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே என்ற காரணத்தால், அவர் மீது வழக்குத் தொடர சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து தவறாக அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், சாட்டப்பட்ட குற்றம் நடந்ததாக சொல்லப்பட்டபோது அவர் அமைச்சராக இருந்ததால், ஆளுநரிடமிருந்து அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். எனவே வழக்குப் பதிய அனுமதி பெற்றதில் இருந்து அனைத்துமே சட்டத்துக்கு எதிரானவை” என்று ஜான் சத்யன் அடுக்கடுக்காக வாதங்களை எடுத்து வைத்திருந்தார். quashes chargesheet against Minister I. Periyasamy

இந்நிலையில், இன்று நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share