சிவகங்கை அருகே கல்குவாரியில் மண் சரிந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். Quarry accident 5 people tragically died
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மலைக்கட்டை கிராமத்தில் மேகவர்மன் என்பவர் ப்ளூ மெட்டல் என்ற பெயரில் குவாரி நடத்தி வருகிறார்.
இந்த குவாரி 450 அடி ஆழம் கொண்டது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மே 20) காலை 9 மணி அளவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். மலையில் ட்ரில் போட்டு பாறைகளை பெயர்த்து எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பாறைகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில் குவாரியில் திடீரென பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் அந்த பொக்லைன் இயந்திரமும் உள்ளே சரிந்து விழுந்ததாக தகவல்கள் வருகின்றன.
மிகப்பெரிய பாறை ஒன்றும் உள்ளே விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
இவர்களில் மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் செல்லும் வழியிலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் கல்குவாரி மண்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
மைக்கேல் என்ற தொழிலாளி தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தை தொடர்ந்து கல்குவாரிக்கு அருகே ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், “கல்குவாரி விபத்தில் சிங்கம்புணரியைச் சேர்ந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். Quarry accident 5 people tragically died
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பனை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அறிவுத்தினேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது. Quarry accident 5 people tragically died
இவ்விபத்து குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டிருந்தால், இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். ஆனால், விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாததால் தான் 6 அப்பாவிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, விதிகள் மீறப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், “விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பள்ளம் தோண்டப்பட்டதே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், அக்குவாரியில் முறையான ஆய்வை மேற்கொண்டு விதிமீறல் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
