தேர்தலுக்கு முன்பே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவரை தேர்தல் முடிந்த மறுநாள் (மே21) உத்திரப் பிரதேச அமைச்சரவையிலிருந்து நீக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்திரப்பிரதேசத்தில் 2017 இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்து 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி. இக்கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பதவி வகித்தார்.
கூட்டணிக் கட்சியாக இருந்தபோதும் 2018 ஆம் ஆண்டில் இருந்தே யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகளை பொதுவெளிகளில் கடுமையாக விமர்சித்து வந்தார் ராஜ்பார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அவர், பாஜக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு தனது கட்சியினருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டுக்கு தனது ராஜினாமா கடிதத்தோடு சென்ற ராஜ்பார், முதல்வர் தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினார்.
தேர்தலுக்கு முன்பே பாஜகவுடனான தனது கட்சியின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்தார் ராஜ்பார். ஆனால் அப்போதும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் யோகி நீக்கவில்லை. அதுமட்டுமல்ல, ராஜ்பார் தனது கட்சியின் சார்பாக உத்தரப்பிரதேசத்தின் 80 மக்களவைத் தொகுதிகளில் 40 இல் தனது கட்சியின் வேட்பாளர்களையும் நிறுத்தினார். அப்போதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை முதல்வர்.
இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாளான இன்று ஓம் பிரகாஷ் ராஜ்பாரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் யோகிஆதித்யநாத் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் ராம் நாயக் நீக்கியிருக்கிறார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராஜ்பார், “முதல்வரின் முடிவை வரவேற்கிறேன். நான் ஒரு மாதம் முன்பே ராஜினாமா செய்துவிட்ட பின்னும் அதை ஏற்காமல் இன்று என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறார்கள். தேர்தலின் போதே என் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டால் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பிவிடும் என்று பயந்துதான் தேர்தல் நடந்து முடிந்த பிறகு என்னை நீக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் நலனில் பாஜகவுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக பாஜக நடப்பதை தொடர்ந்து நான் எதிர்ப்பேன்” என்றும் கூறியுள்ளார் ராஜ் பார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://minnambalam.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://minnambalam.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://minnambalam.com/k/2019/05/19/38)
**
.
.,”