ரஜினியின் வாழ்க்கை படமாகிறதா?

Published On:

| By Balaji

ரஜினியின் வசனங்களை பல்வேறு நிகழ்ச்சிகளிலும், விளம்பரகளிலும் பயன்படுத்தி வருகின்றனர் அவரின் ரசிகர்கள். சிவகார்த்திகேயன் கூட ரஜினியின் ரசிகராய் `ரஜினிமுருகன்’ படத்திலும் ரஜினி முன்பே அவரைப் போல `மிமிக்ரி’ செய்தும் ரசிகராய் வலம் வருகிறார். அவரைப் போலவே ரஜினியின் தீவிர ரசிகரான பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகரின் தம்பியான நடிகர் செல்வா ரஜினியின் பிறந்தநாளான 12.12.1950 என்பதையே தனது படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான செல்வா `ஆத்தா உன் கோவிலிலே’ படத்தின் மூலம் நடிகரானார். அதன் பின்னர் `ராக்காயிக் கோவில்’, `சக்திவேல்’, `நாட்டுப்புறப் பாட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிப்பில் மட்டுமில்லாமல் `கோல்மால்’ என்ற படத்தையும் இயக்கினார். அதன் பிறகு மிஷ்கினின்`யுத்தம் செய்’, `முகமூடி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கும் புதிய படத்திற்கு `12.12.1950’ என்று ரஜினியின் பிறந்தநாளை படத்தலைப்பாக வைத்துள்ளார். இதில் ரமேஷ்திலக், ஆதவன், விஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன் ஆகிய நான்கு பேரும் ரஜினி ரசிகர்களாக நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதையையும், தலைப்பையும் ரஜினியிடம் காட்டி ஆசீர்வாதம் பெற்ற பிறகே படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளாராம் செல்வா. ஒருவேளை ரஜினியின் வாழ்க்கையையும் சின்னதாய் சொல்லியிருப்பாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தனது பிறந்த நாளன்று ரஜினி, அரசியலில் களம் இறங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்ற சூழ்நிலையில் இந்த தலைப்பு படத்திற்கு பெரிய அளவில் விளம்பரமாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share