பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் கடந்த 16ஆம் தேதியன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 63 ரன்கள் குவித்திருந்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹரிஸ் சொஹைல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாம் இன்னிங்ஸைத் துவக்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர் டாம் லாதம் ரன் கணக்கைத் துவங்காமலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார். பின்னர் சுதாரித்து கொண்ட அந்த அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் குவித்திருந்தது.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 249 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3ஆம் நாள் முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. ஒருகட்டத்தில் 130 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது பாகிஸ்தான். பின்னர் நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சுத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்கத் தொடங்கியது. இருப்பினும் மூன்றாம் நிலை வீரரான அஸார் அலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்து சற்று நம்பிக்கையளித்தார்.
65 ரன்கள் சேர்த்த அஸார் அலி, அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததும் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் 59 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 1-0 என்று கைப்பற்றியுள்ளது.

முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடர் 1-1 என்று சமனில் முடிவடைந்திருந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் தேதியன்று துபாயில் தொடங்கவுள்ளது.,”
