சிங்கப்பூர் செல்ல வேண்டிய 238 பயணிகள், இரண்டாவது நாளாக இன்று (அக்டோபர் 23) சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
நேற்று (அக்டோபர் 22) காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 238 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட 243 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்கிய போது, விமானத்தில் திடீர் என இயந்திர கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, விமானம் ஓடு பாதையில் நிறுத்தப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வரப்பட்டது. விமான பொறியாளர்கள் விமானத்தைப் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பிற்பகல் 2.30 மணி ஆகியும் விமானத்தைப் பழுது பார்க்க முடியவில்லை. ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் பயணிகள் கூடத்தில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானம் புறப்பட்டு விடும் எனப் பயணிகளை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். ஆனால் மாலை 4 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, தங்களது பணி நேரம் முடிந்ததாகக் கூறி விமானிகள் புறப்பட்டுச் சென்றனர். இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி விஜயராகவன் பயணிகளுக்குத் தங்கும் இட வசதிகள் செய்து தரப்படும். சிங்கப்பூர் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த விமானம் நாளை (அக்டோபர் 23 ) காலை 9.30 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்படும் எனத் தெரிவித்தார். பயணிகள் அனைவரும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்ட விமானம் புறப்படவில்லை. இதனால், சிங்கப்பூருக்குக் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.
