சென்னை – நாகை என்ஐஏ அதிகாரிகள்!

Published On:

| By Balaji

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை, நாகை உள்ளிட்ட இடங்களில் இன்று (ஜூலை 13) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலை படையால் தொடர்குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த கொடூர தாக்குதலில், 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் சிலர் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். இவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து தேசிய புலனாய்வு முகமை, ஜூன் மாதம் 12 ஆம் தேதி கோவையில் 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையின் போது அசாருதீன், இலங்கை குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமான ஜஹ்ரான் ஹாஷிமினின் நண்பர் எனவும், இவர் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்துகளை அப்பாவி இளைஞர்களிடம் சமூகவலைதளம் மூலமாக பிரச்சாரம் செய்து வந்துள்ளார் எனவும் தெரியவந்தது. இவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். சமீபத்தில், கேரளாவிலும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கருதி சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அல்கொய்தா அமைப்புடன் வஹாதத் இஸ்லாம் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, கொச்சியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமையானது எஸ்.பி ராகுல் தலைமையில் இன்று (ஜூலை 13) அதிகாலை 6 மணி முதல் தமிழகத்தில் நான்கு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள வஹாதத் இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளின் அலுவலகங்களிலும், புரசைவாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவரான முகமது புகாரி என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அமைப்புகளை சேர்ந்த சிலர் கேரளாவில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வஹாதத் இஸ்லாமிக் ஹிண்ட் என்ற இஸ்லாமிய அமைப்பு மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அந்த அமைப்பு அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதுபோல், நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது, அசன் அலி என்பவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share