கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published On:

| By Balaji

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஜாமீன் அளிக்க பாட்டியாலா நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்தமுறை தொடர்ந்து 2ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த போது 2010ஆம் ஆண்டு விவிஐபிகளுக்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இத்தாலி நாட்டிலுள்ள பின்மெக்கானிகா குழுமத்தைச் சார்ந்து இங்கிலாந்தில் இயங்கிவந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் போடப்பட்டது. 3,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் 423 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி துபாயிலிருந்து நாடு கடத்தி வந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனு டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்பு இன்று (பிப்ரவரி 16) விசாரணைக்கு வந்தது.

கிறிஸ்டியன் மைக்கேல் மீது சிபிஐ 2016ஆம் ஆண்டில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.225 கோடி முறைகேடாகப் பெற்றதாக வழக்குப் பதிவு செய்துள்ளது. 2010ஆம் ஆண்டில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேட்டால் அரசுக்கு ரூ.2,666 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ராஜிவ் சக்சேனாவுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி 7 நாள் இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரூ.5 லட்சம் பணத்துடன், 2 பிணை உத்திரவாதங்கள் அளித்து சக்சேனா ஜாமீன் பெற்றார். டெல்லியை விட்டு அனுமதி இல்லாமல் வெளியே செல்லவோ, சாட்சியங்களைக் கலைக்க முயலவோ அல்லது தொடர்பு கொள்ளவோ கூடாது என்றும் அவருக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கிறிஸ்டியன் மைக்கேலுக்கும் பிணை கிடைத்துவிடும் என்று கிறிஸ்டியன் தரப்பில் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை என இரண்டு துறைகளிலும் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு ஜாமீன் அளிக்க நீதிபதி அரவிந்த் குமார் மறுத்துவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share