சண்டே ஸ்பெஷல் – ஆசிஃபா
நேற்று (ஜூன் 8) உலகக் கடல்கள் தினமாம். அண்மைக் காலமாகத் தண்ணீரைப் பற்றிய கவலைகள் பெருகிவரும் நிலையில் கடல்களைப் பற்றி நாம் தவிர்க்க முடியாமல் யோசித்தாக வேண்டியிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக, வெயிலின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்துகொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பல இடங்களில் மழையே இல்லை. கடல் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. உலகம் முழுவதும் அதிவேகமாக வெப்பமாகிவருகிறது. இன்னும் 30 ஆண்டுகள்தாம் மனிதர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்று சில ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்.
இவையனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வாக்கியங்கள் போல இருக்கிறது இல்லையா? ஆனால், அனைத்தும் ஒரே புள்ளியில் இணைகின்றன. பருவநிலை மாற்றம். பருவநிலை மாற்றம் மிகவும் அதிகமாகத் தெரிவது நம் கடல்களின் மூலம்தான். கடல் நீர் மட்டம் உயர்வு, கடலின் வெப்பநிலை உயர்வு, மீன்களின் அழிவு என்று கடல் பல விதங்களில் எதிர்வினையாற்றிவருகிறது.

நம் சமுத்திரங்களில், ஆண்டொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. இவை நம் கண்ணுக்குத் தெரியும் சாதாரண பிளாஸ்டிக். ஆனால், இப்போது ஆய்வாளர்களின் கவனம், நம் கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் பக்கம் திரும்பி இருக்கிறது. பல நாட்கள் வெயிலிலும் நீரிலும் இருந்து மிகச் சிறிய துணுக்குகளாக மாறும் இந்த பிளாஸ்டிக், மீன்களின் வயிற்றுக்குள் எந்த தடங்கலும் இல்லாமல் நுழைகிறது. இந்த மீனைச் சாப்பிடும் பறவைகள் மனிதர்கள் உடம்பிலும் நுழைகிறது.
சில இடங்களில் மீன்களைவிட அதிகமாக பிளாஸ்டிக் இருக்கிறது. அப்படியென்றால், ஒரு மீனின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்போது, அது சிறிய பிளாஸ்டிக் துகளை உணவு என்று நினைத்துச் சாப்பிடும் வாய்ப்பு அதிகம். இதனால் பல மீன் இனங்கள் அழிந்துவருகின்றன. கடந்த 80 ஆண்டுகளில் மீன்களின் எண்ணிக்கை 4.1% குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பெரிதாகத் தெரியாது. ஆனால், 1930-2010க்கு இடையில், 1.4 மில்லியன் மெட்ரிக் டன் மீன்கள் அழிந்துள்ளன.
கடலில் மிதக்கும் பிளாஸ்டிக், 100,000க்கும் அதிகமான கடல்வாழ் உயிரிகள் மற்றும் கடலைச் சார்ந்து வாழும் பறவைகளின் மரணத்திற்குக் காரணமாகிறது என்று சொல்கிறது UK அரசாங்கம். இந்த பிளாஸ்டிக், கடலில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் முக்கியமான பாக்டீரியாவின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது.
ஆய்வாளர்கள் இன்னொரு முக்கியமான தகவலையும் தெரிவித்துள்ளனர். கடந்த 150 ஆண்டுகளில் கடல் நீரின் வெப்ப அதிகரிப்பு, 1871ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு விநாடியும் 1.5 அணுகுண்டைப் போட்டால் ஏற்படும் வெப்பத்திற்கு ஈடானதாக இருக்கிறதாம்! மேலும், முன்பு நினைத்ததைவிட கடல் நீர் 40%க்கும் அதிகமான வேகத்தில் வெப்பமாகிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால், ஒரு விநாடிக்கு 6 அணுகுண்டுகள் போட்டதற்குச் சமம்!
அதிபயங்கரமான, அச்சுறுத்தும் வைக்கும் வேகத்தில் மனிதர்கள் வெளியேற்றிக்கொண்டிருக்கும் வாயுக்களால், greenhouse effect மூலமாக அதிகளவிலான வெப்பம் பூமிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 93% வெப்பத்தைக் கடல்தான் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் பனிக்கட்டி உருகுகிறது, கடல் நீர் மட்டம் உயர்கிறது, மேலும் பல பிரச்சினைகள் வருகின்றன.
இனி, கடலுக்கும் பூமிக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
,”





