கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் டெல்டா மாவட்டங்களில் சாய்ந்துள்ள நிலையில், சாய்ந்த மரங்களை விற்பனை செய்ய உழவன் செயலியில் மர வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழவேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஜா புயலால் தென்னை, தேக்கு உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. இந்த மரங்களை மர வியாபாரிகளுக்கு விற்பனை செய்து, விவசாயிகளின் இழப்பைச் சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக 5 கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது. மேலும், விவசாயிகள் அனைவரையும் உழவன் செயலியில் இணையவும் நாகை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் விவசாயிகளை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சுரேஷ்குமார் *டி.என்.என்.* ஊடகத்திடம் பேசுகையில், “விவசாயிகளையும், மர வியாபாரிகளையும் ஒரே தளத்தில் இணைத்தால் சாய்ந்த மரங்களை விற்க வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரையும் உழவன் செயலியில் இணையக் கேட்டுக்கொண்டுள்ளோம். இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி மர வியாபாரிகளுக்கும் பயனளிக்கும். மர வியாபாரிகள் தேக்கு, மா, பலா உள்ளிட்ட பல வகையான மரங்களை நல்ல விலைக்குக் கேட்கின்றனர். தரமான மரச்சாமான்கள் தயாரிக்க இந்த மரங்கள் உதவும் என்பதால் அவற்றை வாங்க மர வியாபாரிகள் முன்வந்துள்ளனர். இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும்” என்றார்.
அதேபோல *தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (டி.என்.பி.எல்.)* நிறுவனம் காகிதங்கள் தயாரிக்கத் தேவையான மரங்களை டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்ய முன்வந்துள்ளது. நாகை மாவட்டத்தின் ஆண்டார்காடு, குருவன்புலம், கதிரிபுலம், மருட்டூர் மற்றும் தாகட்டூர் பகுதிகளில் கொள்முதல் நிலையங்களை டி.என்.பி.எல் அமைத்துள்ளது. தரமான மரங்களுக்கு நியாயமான விலையை டி.என்.பி.எல். அளிப்பதாகவும் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.�,