நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் செய்த தவறுகள், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நீதிமன்ற தடை ஆணை இவற்றை பேசி முடித்து வியாழக்கிழமை மாலை தமிழகம் முழுவதும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
படம் வருமா, வராதா என்ற குழப்பம் நிலவியதால் தியேட்டரில் ஓபனிங் இல்லை. வெள்ளிக்கிழமையும் வசூல் மந்தமாகவே இருந்தது.
அசல் தேறுமா என்ற கவலையில் இருந்த விநியோகஸ்தர்களுக்கு சனிக்கிழமை வசூல் உற்சாகத்தைக் கொடுத்தது. கோலமாவு கோகிலாவும் இதே போன்று மந்தமாகத் தொடங்கிய வசூல் தாமதமாக சூடுபிடிக்கத் தொடங்கியது போன்றே இமைக்கா நொடிகள் வசூல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அபரிமிதமாகவே இருந்தது.
இமைக்கா நொடிகள் படத்திற்கு வியாழன் மாலைக்காட்சி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவுக்காட்சி வரை தமிழ்நாடு முழுவதும் 9 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது .
படத்தின் வசூல் முன்னேற்றத்துக்கு கெளரவதோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதும் ஒரு காரணம். அவரைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டருக்கு வந்தனர் என்கிறது தியேட்டர் வட்டாரம்.
