கைது வாரண்ட்: ஜி20 மாநாட்டில் புதின் பங்கேற்க மாட்டார்!

Published On:

| By Minnambalam

putin will not attend G20 submit in india

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் நேரில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

ADVERTISEMENT

இந்தாண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் நடத்தப்பட்டன. ஜி20யின் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு ஜி20யின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர உள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் நேரில் கலந்து கொள்ள மாட்டார் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் ட்ரிமிட்டி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ஜி20 மாநாட்டில் புதின் கலந்து கொள்ளும் முறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 15வது பிரிக்ஸ் மாநாட்டில் புதின் நேரில் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக புதின் கலந்து கொண்டார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேரில் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

உக்ரைனில் ரஷ்ய அதிபர் புதின் போர்க்குற்றம் புரிந்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. தென்னாப்பிரிக்கா ஐசிசியில் கையொப்பமிட்டுள்ளது.

இந்த வாரண்ட் காரணமாக வெளிநாட்டில் இருக்கும்போது புதின் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதால் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் இந்தியா ஐசிசியில் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

‘ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கையா?’: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதில்!

பிக்பாஸ் சீசன் 7: இரட்டை கமல் கொடுத்த செம ட்விஸ்ட்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share