டிஜிட்டல் திண்ணை: டாக்டரைக் கொண்டுவர எடப்பாடியின் ஆபரேஷன்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ்அப் ஆன்லைனில் இருந்தது. லொக்கேஷன் கோவை என்று காட்டியது.

“சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விரைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது அதிமுக. வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவால். பாஜகவின் கூட்டணிப் பிடியிலிருந்து முழுதாக விடுபட முடியுமா என்பது ஒரு கேள்வி. பாஜக அல்லாமல் கூட்டணி வைத்தால்கூட உட்கட்சிப் பிரச்சினையான முதல்வர் வேட்பாளர் யார், சசிகலா வருகை போன்ற விவகாரங்கள் அதிமுகவை இன்னமும் குழப்பத்தில்தான் வைத்திருக்கின்றன.

ஆனால், அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் என்று தேர்தல் வேலைகளைச் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டது அதிமுக. புதிய மாவட்டங்கள் பிரிப்பு, புதிய ஒன்றியங்கள் பிரிப்பு என்று நிர்வாக வரையறைகளை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று முதல்வர் எடப்பாடி சேலம் சென்றபோது வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு அங்கிருந்து அஸ்தம்பட்டி பொதுப்பணித் துறை மாளிகைக்குத்தான் சென்றார். அங்கே சேலம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் வந்திருந்தனர். அனைவரையும் ஒன்றாகச் சந்தித்தால் அது அரங்கக் கூட்டமாகிவிடும். மேலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்து வந்த இருபது, முப்பது நிர்வாகிகளைத் தனித்தனியே சந்தித்துத் தேர்தல் தேவை என்ன, அதற்கு முன் செய்ய வேண்டிய களப் பணிகள் என்ன என்பது பற்றியெல்லாம் வகுப்பெடுத்திருக்கிறார். இப்படி சேலம் மட்டுமல்ல; மாவட்டம் மாவட்டமாகப் போகும் முதல்வர் அங்கேயும் அந்தந்த மாவட்ட அரசியலுக்கு ஏற்ற வகையில் வரும் தேர்தலில் அதிமுகவைக் கரையேற்றுவது எப்படி என்றே ஆலோசிக்கிறார்.

இது அதிமுகவுடைய விவகாரம் என்றால்… கூட்டணிக் கட்சிகளில் சிலவற்றை தக்க வைத்துக்கொண்டே ஆவது பற்றியும் எடப்பாடி சில கணக்குகள் போட்டு வருகிறார். பாமகவா, தேமுதிகவா என்றால் பாமகதான் அவரது சாய்ஸாக இருக்கிறது. அதற்கேற்றவகையில் பிரேமலதாவும் தங்கள் தொண்டர்களின் விருப்பம் தனித்து நிற்பதே என்று போடு போட்டார். இது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் give and take என்ற பாலிசிபடியே கூட்டணி வைக்க ஆசைப்படுகிறார் எடப்பாடி. இதற்காக அதிமுக தற்போது அணுகி வரும் தலைவர்களில் ஒருவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

ஜூலை 14ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டம் பற்றி மின்னம்பலத்தில் [தெற்கு மேற்கு: அமைச்சரவையில் எதிரொலித்த வேளாளர் விவகாரம்](https://minnambalam.com/politics/2020/07/15/17/tamilnadu-cabinet-meeting-unofficial-consult-about-velalar-general-name) என்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

அதில் ஒரு சிறு பகுதி ரீவைண்ட்… ‘அமைச்சரவை கூட்டம் அதிகாரப்பூர்வமாக முடிந்த பிறகு அமைச்சர்களோடு முதல்வர் தனிப்பட்ட முறையில் நடத்தும் ஆலோசனை என்பது வழக்கமானது. இந்த வகையில் அமைச்சர்களிடையே தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் பற்றிய விவாதம் எழுந்துள்ளது. குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதும், பின் தங்களை பட்டியல் சமூகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதும் அச்சமூகத்தினரின் நெடு வருடக் கோரிக்கை. இது தொடர்பாக பிரதமர் வரை அவர்கள் சந்தித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சென்னை பல்கலைக்கழக மானுடவியல் தலைவர் சுமதி தலைமையில் இதுபற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்துவிட்ட பிறகும் அதை மத்திய அரசுக்குத் தமிழக அரசு இன்னும் அனுப்பவில்லை. இதனிடையே இந்த அரசாணை தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் அறிக்கையும் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமித் ஷா, மோடி ஆகியோர் தலையிட்டு அச்சமுதாய மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், தமிழக அரசு மானுடவியல் துறைத் தலைவரின் ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. இதுகுறித்து ஜூலை 4ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக அரசு அந்த அறிக்கையை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருப்பதால் தமிழக அரசின் அறிக்கை கிடைத்தவுடன் துரித நடவடிக்கை எடுப்போம். தேவேந்திர குல வேளாளர்களின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறும்’ என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையே தேவேந்திர வேளாளர் என்ற பொதுப் பெயருக்கு கொங்கு வேளாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட பின்னணியில்தான் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனையில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி முதலில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரை அந்த ஆய்வறிக்கையின் ரிப்போர்ட்படி நாம கொடுத்துட்டுப் போயிடலாம். பெயரை மாத்துறதுதான் நம்மோட அதிகாரம். எஸ்சியிலேர்ந்து பிசி ஆக்குறது மத்திய அரசோட வேலை. சவுத்ல இது பெரிய விஷயமா பேசப்பட்டு வருது. நமக்கு இது தேர்தல்ல சிக்கலாயிடக் கூடாது பாருங்க’ என்று சொல்லியிருக்கிறார், அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் இதை ஆமோதிக்கும் வகையில் சில கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ‘இதை மாத்திவிட்டுடலாம்ணே… தென்மாவட்டத்துக்கு மட்டுமில்ல… நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், ஊட்டி வரைக்கும் தேர்தல்ல யூஸ்ஃபுல்லா இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் இதுபற்றி முதல்வரோ, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களோ எதுவும் பேசவில்லை. தென்மாவட்டங்களில் சாத்தான்குளம் பிரச்சினைக்குப் பின் ஒட்டுமொத்தமாக திமுகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகச் சில அமைச்சர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதை ஈடுகட்ட தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் செய்தால் அதிமுகவுக்குப் பெரும் அரசியல் லாபம் கிடைக்கும் என்று கருதுகிறார்கள். தென்மாவட்டத்தில் அதிமுகவின் முதுகெலும்பாக இருந்த முக்குலத்தோர் வாக்குகள் முழுமையாகக் கிடைக்காமல் போனாலும் அதை ஈடுகட்ட இந்த பெயர் மாற்றம் உதவும் என்பது அவர்கள் கணக்கு. ஆனால் மேற்கு மாவட்ட அமைச்சர்களோ, ‘இந்த பெயரை மாற்றினால் கொங்குவில் கடுமையான எதிர்ப்பு நமக்கு வரும்’ என்று கருதுகிறார்கள்.

இந்த நிலையில் வேளாளர் பொதுப் பெயர் கோரிக்கையை நிறைவேற்றுவதால் கொங்குவில் எழும் எதிர்ப்பை எளிதாக நம்மால் சமாளித்துவிட முடியும்,. ஆனால் அப்படி அறிவிக்காத பட்சத்தில் தென்மாவட்டத்தில் ஏற்படும் இழப்பை சமாளிக்க முடியாது என்று கருதுகிறார் முதல்வர் எடப்பாடி. இதையடுத்து தனக்கு நம்பிக்கைக்குரிய அமைச்சர் வேலுமணியை அழைத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக கூட்டணிக்குக் கொண்டு வரும் வேலைகளில் இறங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதையடுத்து வேலுமணி டாக்டரோடு தொடர்ந்து பேசிவருகிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி சமீப காலமாகவே பாஜகவின் ஆதரவுப் போக்கை மேற்கொண்டு வந்தார். அதேநேரம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி பற்றிய சாத்தியங்களையும் புதிய தமிழகம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தென்மாவட்டத்திலும், மேற்கு மாவட்டங்களில் சில பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகள் ஆகியவற்றில் கிருஷ்ணசாமியைக் கூட்டணியில் வைத்துக்கொள்வதன் மூலம் அறுவடை செய்யலாம் என்று கருதுகிறது. இதற்காக வேலுமணி டாக்டர் கிருஷ்ணசாமியோடு பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் பொதுப்பெயர் அறிவிப்பை அதிமுக அரசு வெளியிட்டு அதற்கு நன்றி தெரிவிக்கும்வண்ணம் முதல்வரை டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பது என்றும் இப்போதைக்குப் பேசி முடிக்கப்பட்டிருப்பதாக தகவல். இப்படி அதிமுக ஒவ்வொரு பேக்கேஜாக கவனம் எடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share