கோவையில் பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வெழுதவைத்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். puppeteer student refusal in classroom
கோவை பொள்ளாச்சியை அடுத்த செங்குட்டைபாளையத்தில் சுவாமி சிப்பவானந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு நடந்து வருகிறது.
இங்கு படித்து வந்த 8ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 5ஆம் தேதி பூப்பெய்தியுள்ளார். இருந்தாலும் முழு ஆண்டுத் தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு வருகைத் தந்துள்ளார்.
இந்தநிலையில் மாணவி வகுப்பறைக்கு வெளியே ஒரு படிக்கக்கட்டில் அமரவைக்கப்பட்டு தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த வீடியோ இன்று (ஏப்ரல் 10) காலை முதல் இணையத்தில் வைரலானது. பெண்களின் வாழ்வில் இயற்கையாக நடக்கும் நிகழ்வுக்கு, இப்படி தீண்டாமை போல ஒதுக்கி வைப்பது, அதுவும் பள்ளியிலேயே இப்படி நடப்பது சரியா என இணையவாசிகள் கொந்தளித்தனர். அந்த பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இந்தநிலையில் அந்த பள்ளிக்கு போலீசாரும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தனியே அமரவைக்க சொன்ன அம்மா

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஏஎஸ்பி சிருஷ்டி சிங், ”இந்த மாணவி பூப்பெய்தியதால் அவருடைய அம்மா பள்ளியின் துணை முதல்வரைச் சந்தித்து, தொற்று நோய் அபாயம் ஏற்படும் என்பதால் தனியாக தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதன்படி தான் மாணவி தனியாக அமரவைக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில் மாணவி தனது அம்மாவிடம் கால் வலி இருப்பதாக கூற, இதுகுறித்து அவரது அம்மா ஏன் என்று விசாரித்திருக்கிறார். அப்போதுதான் தரையில் அமர்ந்து தேர்வெழுதியதாக மாணவி கூறியிருக்கிறார். இந்தநிலையில் கடைசி நாள் தேர்வு எழுத வந்தபோது, அந்த மாணவி வெளியே அமரவைக்கப்பட்டு தேர்வெழுத வைக்கப்பட்டிருக்கிறார். இதை அந்த மாணவிக்கு தெரிந்த ஒரு பையன் பார்த்து, அவரது அம்மாவுக்கு தகவல் கொடுத்திருக்கிறான். இதன்பின் மாணவியின் அம்மா வந்து வீடியோ ரெக்கார்டு செய்திருக்கிறார்.
அப்போது ஆபீஸ் ஸ்டாப் வந்து ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, நான் என் பிள்ளையை தனியாக அமரவைத்து தேர்வெழுத அனுமதியுங்கள் என்று கேட்டேனே தவிர வெளியில் அமரவைத்து தேர்வெழுத சொல்லவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
அதே சமயம் மற்ற 20 மாணவர்கள் வேறொருபக்கம் கீழே அமரவைக்கப்பட்டு தேர்வெழுத வைக்கப்பட்டிருக்கின்றனர். விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.
இரண்டு விதமான விசாரணை
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கூறுகையில், “பள்ளி மாணவியை வாசலில் அமர்த்தி தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவத்தில், இரண்டு விதமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம் காவல்துறை சார்பிலும், இரண்டாவது தனியார் பள்ளி என்பதால் தனியார் பள்ளிகளுக்கு என இருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் சார்பாக பள்ளியின் மேலாண்மை அதிகாரிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எகஸ் பக்கத்தில், “தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
முதல்வர் சஸ்பெண்ட்!
அவர் மாவட்ட கல்வி அலுவலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எங்கள் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5 ஆம் தேதி பூப்பெய்தாள். பள்ளியில் முழுஆண்டு தேர்வு நடைபெற்று வந்த வேளையில் மாணவியின் தாயார் முதல்வர் ஆனந்தியை தொடர்புகொண்டு பேசினார். பரிட்சை எழுதுவது தொடர்பாக வேண்டுகோள் செய்தார். பள்ளி முதல்வர் பரிட்சை எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கூறியும், மாணவியின் தாயார் தனியாக அமரவைத்து தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் அம்மாணவி தனியாக அமரவைத்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் இலவச கட்டாய கல்விச் சட்டம் 2009 விதிகளில் விதி 17-ன் படி இச்செயல் விதிமுறைக்கு புறம்பானதால் பள்ளி முதல்வர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. puppeteer student refusal in classroom