குவாலிபயர் 2 போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு 2வது முறையாக முன்னேறியது பஞ்சாப் அணி. punjab kings won MI by 5 wickets at qualifier 2
பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி அகமதாபாத் நரேந்திர மைதானத்தில் நேற்று (ஜூன் 1) இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த களம் காண முயன்ற நிலையில், மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி 2.15 மணி நேரம் தடைபட்டது. அதனையடுத்து சரியாக 9.45 மணிக்கு ஆட்டத்தின் முதல் பந்தை வீசினார் பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங்.
எதிர்பாராத விதமாக பவர்பிளேயில் 3ஆவது ஓவரை வீச ஸ்டாய்னிஸை, ஸ்ரேயாஸ் அழைத்த நிலையில், அவர் அச்சுறுத்தலான ரோகித் சர்மாவை அவுட்டாக்கி வெளியேற்றி ஆச்சரியம் அளித்தார்.

எனினும் 2-வது விக்கெட்டுக்கு இணைந்த பேர்ஸ்டோ – திலக் வர்மா ஜோடி இருவரும் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் குவித்த நிலையில் பேர்ஸ்டோ 38 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் வழக்கம்போல் பேட்டை சுழற்ற மும்பை அணியின் ஸ்கோர் எகிறியது.
எனினும் ஜேமிசன் வீசிய 14வது ஓவரில் சூர்யகுமாரும், சஹால் வீசிய அடுத்த ஓவரில் திலக் வர்மாவும் தலா 44 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் நமன் தீர் 7 பவுண்டரியுடன் 37 ரன்கள் அடித்த நிலையில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு செல்ல இலக்கை எட்ட வேண்டும் என்ற கனவுடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் துவக்க வீரர்களான பிரியான்ஸ் (20) மற்றும் பிராப் சிம்ரன் (6) இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

எனினும் அடுத்த வந்த ஜோஷ் இங்கிலீஸ் (38), நேஹல் வதேரா (48) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (87*) ஆகியோர் பொறுப்புடனும், அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பெற செய்தனர்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் 19வது ஓவரில் கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, 11 வருடங்களுக்கு பிறகு 2வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
வரும் 3ஆம் தேதி நாளை இதே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பைனலில் ஆர்.சி.பி அணியை எதிர்கொள்ள உள்ளது பஞ்சாப் அணி.