ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது லீக் போது போட்டி அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தி பார்சபரா மைதானத்தில் நேற்று (எப்ரல் 5) இரவு நடைபெற்றது.
ராஜஸ்தான் அணிக்கு சொந்தமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷிகர் தவான் அதிகப்பட்சமாக 56 பந்துகளில் 86 ரன்கள் அடித்தார்.

ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனையடுத்து களமிங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்குவது இதுவே முதல்முறை. முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது அவர் தொடக்க வீரராக இறங்கியிருந்தார்.
எனினும் சோதனை முயற்சியாக களம் கண்ட இந்த தொடக்க ஜோடி நிலைக்கவில்லை. யஷஸ்வி 11 ரன்களில் ஆட்டமிழக்க, 4 பந்துகளை சந்தித்த அஸ்வின் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களான ஜோஸ் பட்லர்(19), சஞ்சு சாம்சன்(42), படிக்கல் (21), ரியான் பராக் (20) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் வெற்றியை நோக்கியை அணியை தள்ளினர்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக ஆடக்கூடிய ஹெட்மேயரும், இம்பேக் பிளேயராக களமிறங்கிய துருவ் ஜுரேலும் இருந்தனர்.
அந்த ஓவரை இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவரான சாம்கரண் வீசினார்.
முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில், 3வது பந்தில் 1 ரன்னுக்கு ஆசைப்பட்ட ஹெட்மேயர் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் எடுக்கப்படவேண்டிய நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு மைதானத்தில் இருந்த இரு அணியின் ரசிகர்களிடமும் தொற்றிக்கொண்டது.
எனினும் சாம் கரணின் சாமர்த்தியமான பந்துவீச்சால் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி கடைசி 3 பந்துகளில் வெறும் 6 ரன்களே எடுத்தது.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
இந்த தொடரில் தனது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி 4 புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தற்போது முன்னேறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சித்திரை விழா: சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்!