மது போதையில் அவைக்கு வந்தாரா பஞ்சாப் முதல்வர்?

Published On:

| By Kavi

முதலமைச்சர் பகவந்த் மான் மதுபோதையில் சட்டப்பேரவைக்கு வந்ததாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதுடன், அவருக்கு மது பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமான இன்று பஞ்சாபில் சட்டப்பேரவை  கூட்டத்தொடர் நடைபெற்றது.  தொடக்கத்தில் சுமூகமாக இருந்த விவாதம், காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா அவையில் மொபைல் பயன்படுத்தியதற்கு முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்தபோது சூடுபிடித்தது.

ADVERTISEMENT

அப்போது பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா,  கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் உடனடியாக ஆல்கோ-மீட்டர் (மது பரிசோதனை) மற்றும் ஊக்கமருந்து பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் நம் முதல்வர் மது அருந்திவிட்டு சட்டப்பேரவைக்கு வந்துள்ளார் என்று குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து , மதுபானப் பரிசோதனை கோரிக்கையை பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் நிராகரித்ததைத் தொடர்ந்து, அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்பால் சிங் கைரா தனது எக்ஸ் தளத்தில், “சட்டப்பேரவையில் முதல்வர் பகவந்த் மான் போதையில் இருந்தார். அவருக்கு மது போதை பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறி நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சிரோமணி அகாலி தளம் கட்சி தனது எக்ஸ் தளத்தில், ” முதல்வரின் நடத்தையை வன்மையாக கண்டிக்கிறோம்.  அவர் மது அருந்திய நிலையில் வந்திருக்கக் கூடாது. அவரை இன்றே ஒட்டுமொத்த பஞ்சாப் மக்களின் முன்னிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய பாஜக எம்.பி. சுவாதி மாலிவால், சட்டப்பேரவையில் பகவந்த் மான் உரையாற்றும் வீடியோ காட்சி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், பகவந்த் மானுக்கு “மதுப் பரிசோதனை” செய்யப்பட வேண்டும் என்றும், அதில் அவர் மது அருந்தியது உறுதியானால் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பகவந்த் மான் கூறுகையில், “எழுப்புவதற்கு அவர்களிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதால் இப்படி குற்றம்சாட்டுகிறார்கள்” என்றார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share