நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் சென்னை, பெங்களுரு அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 62 ரன்களும், ரஹானே 29 ரன்களும் விளாசினார்.
இதனையடுத்து 163 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். 4-ஆவது ஓவரில் ரிச்சர்ட் கிளிசன் வீசிய பந்தில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பிரப்சிம்ரன். இதனையடுத்து ரூஸோ களமிறங்கினார்.
ரூஸோ, பேர்ஸ்டோ ஜோடி அதிரடியாக மட்டையை சுழற்ற, அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. 10-வது ஓவரில் ஷிவம் துபே வீசிய பந்தில், பேர்ஸ்டோ தோனியிடம் கேட்கச் கொடுத்து அவுட்டானார்.
12-வது ஓவரில் அணியின் ரன் எண்ணிக்கை 100-ஐ கடந்த போது, சிறப்பாக ஆடிய ரூஸோ ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்டானார். 23 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் அடித்து வெளியேறினார்.

களத்தில் இருந்த சாம் கர்ரன், ஷஷாங்க் சிங் ஜோடி பொறுமையாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 17.5-ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ப்பிரீத் ப்ராருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
