கோடைக்கேற்ற முக்கிய காய்களில் பறங்கிக்கு முக்கிய இடமுண்டு. பறங்கிக்காயில் உள்ள அதிக அளவு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மலச்சிக்கலை விரட்டும். குளிர்ச்சியான பறங்கிக்காயில் பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். பித்தம் போக்கும். பசியைத் தூண்டும். மூல நோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
என்ன தேவை?
- பொடியாக நறுக்கிய பறங்கிக்காய் – ஒரு கப்
- பொடியாக நறுக்கிய மாங்காய் – அரை கப்
- வெல்லம் – சிறிய துண்டு
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- கடுகு – கால் டீஸ்பூன்
- சீரகம் – அரை டீஸ்பூன்
- பூண்டு – 2 பற்கள்
- கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, கடுகு, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய பறங்கிக்காயைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய மாங்காய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பறங்கிக் காயும் மாங்காயும் வெந்ததும் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அரைத்துவைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் வெல்லம் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
